மகாராஷ்டிரா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக சிவசேனா கட்சியைச் சேர்ந்த 38 அதிருப்தி எம்எல்ஏ.க்கள் தெரிவித்திருப்பதால், அம்மாநில அரசு பெரும்பான்மையை இழந்திருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், பா.ஜ.க. 106 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் தகுதியைப் பெற்றன. அப்போது, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனக்கு முதல்வர் பதிவி தரவேண்டும் என்றும், தனது மகனுக்கு அமைச்சர் பதவி தரவேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், பா.ஜ.க.வும், சிவசேனாவும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, பா.ஜ.க. முதல் இரண்டரை ஆண்டுகளும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவும் முதல்வர் பதவியில் அமர்வது என்று முடிவு செய்யப்பட்ட நிலையில், முதல் இரண்டரை ஆண்டுகள் தனக்கு முதல்வர் பதவியை தரவேண்டும் என்று உத்தவ் தாக்கரே அடம் பிடித்தார். இதற்கு, பா.ஜ.க. தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டதால் கூட்டணியை முறித்துக் கொண்டார். பின்னர், ‛மஹா விகாஸ் அகாதி’ என்னும் பெயரில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்த உத்தவ் தாக்கரே, முதல்வர் பதவியையும் கைப்பற்றினார். அதோடு, தனது மகனுக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார்.
இந்த நிலையில்தான், சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி துாக்கி இருக்கிறார். இவருக்கு ஆதரவாக 38 சிவசேனா எம்.எல்.ஏ.க்களும், 7 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்கள் அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் தங்கி இருக்கிறார்கள். ஆகவே, மேற்கண்ட எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவசேனா கட்சி சார்பில் சட்டமன்ற துணை சபாநாயகரிடம் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, 16 சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கு மகாராஷ்டிரா சட்டமன்ற துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பினார். அதில், இன்று (ஜூன் 27) மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த தகுதி நீக்க நோட்டீஸுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இது இன்று விசாரணைக்கு வரும் நிலையில், 38 அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்களும் மகாராஷ்டிரா அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஏக்நாத் ஷிண்டே உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும், இதன் காரணமாக மஹா விகாஸ் அகாதி கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார். இதனால், சிவசேனா தலைமையிலான மகாராஷ்டிரா அரசு கவிழ்வது உறுதியாகி இருக்கிறது.