வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக பதியப்பட்ட வழக்கில் கைதான பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகளுக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தங்களது வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோர் மீது நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரையும் தனிப்படை போலீஸார் ஆந்திராவில் கடந்த ஜன.25 அன்று கைது செய்தனர். பின்னர் இவர்கள் இருவரும் சென்னை வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிப்.9 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவருடைய மனைவி மெர்லினா ஆகிய இருவருக்கும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக கடந்த பிப்.2 அன்று விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.அல்லி, இந்த வழக்கின் தீர்ப்பை பிப்.6-க்கு தள்ளி வைத்திருந்தார். அதன்படி இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி, இருவருக்கும் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.