திராவிடம் மறைத்த சுதந்திர போர் வீரன் மாமன்னர் பூலித்தேவன்

திராவிடம் மறைத்த சுதந்திர போர் வீரன் மாமன்னர் பூலித்தேவன்

Share it if you like it

ஆங்கிலேயர்களைத் தனது தாய்நாட்டை விட்டு வெளியேறச் சொன்ன முதல் இந்தியர், “பூலித்தேவர்” என வரலாற்று ஆசிரியர்கள் மேற்கோள் காட்டுகின்றனர்.

நெற்கட்டான் செவ்வலை ஆண்ட பூலித்தேவரின் வாழ்க்கை, வீரம் நெறஞ்ச வரலாறாகும்.

12 வது நூற்றாண்டில், ராமநாதபுரத்தில் இருந்து சங்கரன் கோவிலுக்கு வந்த பூலித்தேவரின் முன்னோர்கள், ஒரு கோட்டையை கட்டி சிறு ராஜ்யத்தை அமைத்து, அங்கு ஆண்டு வந்தார்கள்.

10 வது தலைமுறையில், 1715இல் நெற்கட்டான் செவ்வலில் பிறந்த பூலித்தேவர், 1726இல் முடி சூட்டப்பட்டு, அரசனாகிறான். இறை உணர்வுடன் வளர்கிறான். முறையான கல்வி பெறுகிறான், 12 ஆவது வயதில் போர் பயிற்சியும் பெறுகிறான். வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சுருள் பட்டா சுழற்றல், குதிரை மற்றும் யானை ஏற்றம் ஆகிய பயிற்சிகளை பெற்று, தன்னை பலப்படுத்தி கொண்டார். மேற்கு தொடர்ச்சி மலைகளில், புலி வேட்டையாடுவது அந்த வீரனுக்கு, பிடித்தமான விளையாட்டாக இருந்தது. வீரத்துக்கு உதாரணமாக, மக்களின் நம்பிக்கையாக இருந்தார், பூலித்தேவர்.

சிவகங்கை பாளையக்காரர் எடுத்து சென்ற காளைகளை, சண்டை போட்டு, கால்நடைகள் மீட்டு கொண்டு வந்த அந்த வீர செயல், பூலித்தேவரின் மகிமையை சுற்று வட்டாரத்தில் பெருமையாக அறிமுகப் படுத்தியது.

பூலித்தேவரின், விவேகம் நிறைந்த வேகத்திற்கு முன், ஆங்கிலேயர்களால் நிற்க முடியவில்லை. வரி கேட்டு வந்த ஆங்கிலேயர் தளபதியை, வரி தர மாட்டேன் என்று சொல்லி எதிர்த்து நின்று போரிட்டு, தோற்க செய்து, விரட்டி அடித்தார், பூலித்தேவன்.

ஆங்கிலேயர்களை எதிர்க்க, பாளையக்காரர்களின் ஒற்றுமையே  தேவையாகும் என நினைத்தார், வீர மன்னர் பூலித்தேவர். இந்தியாவின் வரலாற்றிலேயே, சுதேசி அரசுகளின் கூட்டணி அமைத்த பெருமையும், இவருக்கு தான் சேரும். இந்த ஒருங்கிணைப்பு முயற்சியில் கொல்லன் கொண்டான், சேத்தூர், வடகரை, ஊத்துமலை, தலைவன் கோட்டை மற்றும் திருவண்டபுரம் அரசும் கூட்டணியில் இணைந்து கொண்டன.

17 போர்கள் தொடர்ந்து கிழக்கு இந்திய கும்பினியின் படையை எதிர்த்தும், ஆங்கிலேயர்களை 15 போர்களில் தோற்க செய்தார், பூலித்தேவர். கடைசியில், சூழ்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து கொண்டு, முஹம்மது யூசப் கான் (கான்சாகிப் என்ற மருதநாயகத்தை) பூலித்தேவனுக்கு எதிராக இறக்கினார்கள், ஆங்கிலேயர்கள்.

யூசுப்கான் நேரடியாக பூலித்தேவரின் வீரத்துக்கு முன் நிற்க முடியாமல், நேர்மையற்ற முறையை கையாண்டு, ராஜ்யங்களை பூலித்தேவருக்கு எதிராக திருப்பினார்.

திருவிதாங்கூர் அரசு பூலித்தேவருக்கு எதிராக திரும்பியது. நடுவய்க்கார பாளையக்காரர்களும், லஞ்சம் பெற்று அவருக்கு கொடுத்த ஆதரவை கை விட்டார்கள். சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தஞ்சை மக்களை பூலித்தேவருக்கு எதிராக திருப்பினார்கள். டச்சுகாரர்களும், பிரெஞ்சுகாரர்களும் உதவி  செய்ய முன் வந்த போதும், அந்த உதவியை வாங்க மறுத்து விட்டார், பூலித்தேவர்.

1761 இல் துவங்கிய போர், 1767 வரை நீடித்தது. 29 கோட்டைகள் அழிக்கப் பட்டன. மே மாதம் 1767 இல், கர்னல் டொனால்ட் கேம்ப்பெல் மற்றும் அவரது குழு வாசுதேவ நல்லூர் கோட்டையைத் தாக்கியது. அவர்களின் பீரங்கி குண்டு, கோட்டையின் சுவரில் ஒரு துளையை உருவாக்கியது. வீரர்கள் மண்ணையும், வைக்கோலையும் மட்டுமல்லாமல் தனது உடல்களை கொண்டு, அந்த கோட்டை சுவற்றின் ஓட்டையை மறைத்து, அடைத்தார்கள். போர், ஒரு வாரம் தொடர்ந்தது. பிரிட்டிஷ் இராணுவம் கோட்டையைக் கைப்பற்றியது. பூலித்தேவரின் மனைவி மற்றும் குழந்தைகளை கோட்டையில் உயிருடன் எரித்தனர். பூலித்தேவர் கைது செய்யப் பட்டார்.

ஆங்கிலேயர்களால், பூலித்தேவர் சிறை பிடிக்கப் பட்ட போது, ​​வழியில், பூலித்தேவர் சங்கரநாராயணன் கோவிலில் வழிபட விரும்பினார். அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. பூலித்தேவர் கோவிலில் இருந்து தப்பியதாகவும், தப்பிய பிறகு பிரிட்டிஷாரின் கைகளில் வரவில்லை என்றும், வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இந்த சம்பவத்தால் பீதி அடைந்தார்கள், ஆங்கிலேயர்கள். இதன் விளைவை நினைத்து கலங்கினார்கள்.

கிழக்கு இந்திய பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் மீதான பயத்தை, பிற பாளையக்காரர்கள் விட்டு விடக் கூடாது என்பதற்கு, அவர்கள் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள். ஒருவரை, பூலித்தேவனாக நிறுத்தி, அவனைக் கொன்று, ஆங்கிலேயர்களை எதிர்த்து கிளர்ச்சி செய்ததால், பூலித்தேவர் கொன்று விட்டதாக செய்தியை பரப்பினார்கள், வெள்ளைகாரர்கள் என்று சில நாட்டுப் புற பாடல்கள் கூறுகிறது.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில், பூலித்தேவர் தோற்றாலும், இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில், அவரது வீரமும், தேசபக்தியும் முன்னோடியாக இருந்தது. பின் வந்த தலைமுறைகளில், பூலித்தேவரின் வீர வாழ்க்கை வரலாறு, தேசபக்தியை நோக்கி ஊக்குவித்தது மற்றும் ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து, நம் தாய்நாட்டை விடுவிக்கும் ஆர்வத்தை வளர்த்தது.

பூலித்தேவர் பற்றி பேசும் போதெல்லாம், அவரது நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் விசுவாசிகள்- அவரது தளபதிகளான ஒண்டிவீரன் மற்றும் வெண்ணிக்காலடி ஆகியோரும் நினைவு கொள்ள வேண்டும். இத்தகைய தமிழ் வீரரை போற்றி வணங்குவோமாக.

M. விஜயா


Share it if you like it