மேற்கு வங்கம் ஜல்பைகுரி பகுதியில் உள்ள சேவோக் சாலையில் ராமகிருஷ்ணா மடம் ஒன்று உள்ளது. அந்த மடத்தில் கடந்த சனிக்கிழமை இரவு துப்பாக்கி ஏந்திய மர்ம கும்பல் ஒன்று நுழைந்து மடத்தில் உள்ள துறவிகளை கடுமையாக தாக்கியுள்ளனர். மடத்தில் இருந்த காவலர்கள் மற்றும் வேலையாட்களையும் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் மடத்தில் உள்ள பொருட்களை அடித்து சேதப்படுத்தினர். அங்கிருந்த சிசிடிவி கேமராக்களையும் உடைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மடத்தின் நிர்வாகிகள் எழுத்துப்பூர்வமாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
முன்னதாக மே 18 அன்று மம்தா பானர்ஜி, ராமகிருஷ்ணா மடத்தின் சில துறவிகள் பாஜகவின் ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். “ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் பாரத் சேவாஷ்ரம் சங்கத்தின் சில துறவிகள் டெல்லியில் உள்ள பாஜக தலைவர்களின் செல்வாக்கின் கீழ் வேலை செய்கிறார்கள். கோவில்களை நிர்வகிப்பவர்கள் போற்றுதலுக்குரிய ஆன்மிகப் பணிகளைச் செய்து வரும் நிலையில், அனைவரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. நாங்கள் துறவிகளை மதிக்கிறோம்,” என்று அவர் ஆரம்பாக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கோகாட்டில் நடந்த தேர்தல் பேரணியில் பேசினார்.
இவ்வாறு மம்தா பேசியதற்கு பிரதமர் மோடி கடுமையாக சாடினார். மம்தா பானர்ஜி”
இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பிடியில் இருப்பதாகவும், இஸ்லாமியர்களின் வாக்கு வங்கிக்காக அவர்களை “சமாதானப்படுத்துவதற்காக ஹிந்து மத அமைப்புகளை அச்சுறுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் பாரத் சேவாஷ்ரம் சங்கத்திற்கு எதிராக மம்தா பானர்ஜி பொய்களைப் பரப்புவதன் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் கண்ணியத்தின் எல்லையைத் தாண்டிவிட்டதாக” பிரதமர் மோடி விமர்சித்தார்.
இதுதொடர்பாக பாஜகவின் தேசிய தகவல் தொழில்நுட்பப் பிரிவின் ஒருங்கிணைப்பாளரான அமித் மாளவியா எக்ஸ் வலைதளத்தில், மேற்கு வங்காளத்திற்கு மம்தா பானர்ஜி செய்திருக்கும் மிக மோசமான செயல் இது.
அவர் ராமகிருஷ்ணா மிஷன், பாரத் சேவாஷ்ரம் சங்கம் மற்றும் இஸ்கான் ஆகியோரை பொது மேடையில் தவறாக விமர்சித்து பின்னர், அடியாட்களை வைத்து , துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுடன் ஜல்பைகுரியில் உள்ள ராமகிருஷ்ணா மடத்திற்குள் நுழைந்து, துறவிகளைத் தாக்கி, சிசிடிவியை உடைத்து, சாதுக்களை வலுக்கட்டாயமாக தெருக்களில் தூக்கி எறிந்துள்ளனர். இது தாலிபான் ஆட்சிக்குக் குறைவானதல்ல. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.