அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக, ஒரு நபர் கோயிலில் கற்பூரம் ஏற்றி கண்ணீர் மல்க சாபம் விடும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2011-16 அதி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அமைச்சர் செந்தில்பாலாஜியும், அவரது தம்பி அசோக்குமார், உதவியாளர் சண்முகம் ஆகியோர் ஏராளமானோரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது, பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பலரும் செந்தில் பாலாஜி குடும்பத்தினருக்கு எதிராக சாபம் விட்டதாக தகவல்கள் வெளியானது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரும் பலரிடம் பணம் கொடுத்து ஏமாந்திருக்கிறார்.
வேலையும் வாங்கிக் கொடுக்காமல், பணத்தையும் திருப்பித் தராமல் செந்தில்பாலாஜி ஏமாற்றி வந்திருக்கிறார். ஆனால், பணம் கொடுத்தவர்கள் பாஸ்கரனிடம் நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். இதனால் விரக்தியடைந்த பாஸ்கரன், திருமழிசையிலுள்ள ஒரு கோயிலில், கற்பூரம் ஏற்றி, கண்ணீர் மல்க செந்தில்பாலாஜிக்கு சாபம் கொடுக்கிறார். அப்போது, அமைச்சர் செந்தில்பாலாஜியை நீயே கேளு. நீ கண்டிப்பா கேட்பாய் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அரசுக்கோ அதிகாரிகளுக்கோ இடையூறு செய்ய மாட்டேன். மன வலியோடு அமைதியாக ஊரைவிட்டுச் செல்கிறேன் என்று கண்ணீர் மல்க விபூதியை அடித்துவிட்டுச் செல்கிறார்.
தற்போது அமலாக்கத்துறையினரால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. செந்தில்பாலாஜியால் பாதிக்கப்பட்ட பலரும் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள். இன்னும் சிலரோ, இந்த கோயில் எங்கே இருக்கிறது. நாமளும் ஒரு நாள் போய் சாமி கும்பிட்டு விட்டு வரவேண்டும் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.