மணிப்பூர் கலவரத்துக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம்: ராகுல் காந்திக்கு மாநில கட்சி தலைவர் ஆவேச கடிதம்!

மணிப்பூர் கலவரத்துக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம்: ராகுல் காந்திக்கு மாநில கட்சி தலைவர் ஆவேச கடிதம்!

Share it if you like it

மணிப்பூர் கலவரத்துக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று அம்மாநில மணிப்பூர் தேசபக்தி கட்சியின் பொதுச் செயலாளர் நௌரெம் மோகன் குற்றம்சாட்டி இருப்பதோடு, ராகுல் காந்திக்கும் கடிதம் எழுதி இருக்கிறார்.

இட ஒதுக்கீடு தொடர்பாக, வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையினரான மெயிட்டி சமூகத்தினருக்கும், பழங்குடியினரான குக்கி சமூகத்தினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. கடந்த மே மாதம் 3-ம் தேதி தொடங்கிய வன்முறை சம்பவம், இன்னும் தொடர்ந்து வருகிறது. இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். வன்முறைக்கு முடிவு கட்ட பிரதமர் நரேந்திர மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். அதேபோல, அமித்ஷா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டமும் நடந்தது. இதனிடையே, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 2 நாள் பயணமாக மணிப்பூர் சென்றிருக்கிறார்.

இந்த நிலையில்தான், மணிப்பூரில் கலவரம் வெடிக்க காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று குற்றம்சாட்டி இருப்பதோடு, இது தொடர்பாக ராகுல் காந்திக்கும் கடிதம் எழுதி இருக்கிறார் மணிப்பூர் தேசபக்தி கட்சியின் பொதுச்செயலாளர் நௌரெம் மோகன். அக்கடிதத்தில், “ராகுல் ஜி, மணிப்பூரில் தற்போது நிலவும் வன்முறை நெருக்கடி குறித்த உங்கள் அக்கறையை நான் பாராட்டுகிறேன். இருப்பினும், இதை இரு சமூகங்களுக்கு இடையேயான சண்டை என்று தவறாக விவரித்துள்ளீர்கள்.

இச்சந்தர்ப்பத்தில் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். மியான்மர் மற்றும் பங்களாதேஷில் இருந்து சட்டவிரோத குடியேற்றத்தை ஊக்குவித்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரிட்டிஷ் கொள்கையான மெய்டேய் கட்டுப்பாட்டின் தொடர்ச்சியின் விளைவுதான் மணிப்பூரில் தற்போதைய வன்முறை நெருக்கடிக்கு காரணமாகும். அதேபோல, குக்கி தீவிரவாத அமைப்புகளை வளர்த்து, பள்ளத்தாக்கு அடிப்படையிலான கிளர்ச்சியாளர்களை அழித்தொழிக்கும் காங்கிரஸ் அரசின் கொள்கையும் முக்கிய காரணமாகும்” என்று கூறப்பட்டுள்ளது.

ஆக மொத்தத்தில் காங்கிரஸ் கட்சியின் தவறான கொள்கையால்தான் தற்போது மணிப்பூரில் கலவரம் வெடித்திருக்கிறது என்பது இவரது கடிதத்தின் மூலம் தெளிவாகிறது. அதேபோல, மணிப்பூர் கலவரத்துக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று அம்மாநில ஏ.எம்.எஸ்.யூ. எனப்படும் மாணவர் சங்கத்தினரும் குற்றம்சாட்டி இருக்கின்றனர்.


Share it if you like it