மருது பாண்டியர் | சின்ன மருது | சுதந்திரம்75

மருது பாண்டியர் | சின்ன மருது | சுதந்திரம்75

Share it if you like it

சின்ன மருது

1753 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி, விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த மொக்க பழநியப்பன் சேர்வை என்பவருக்கும், அவரது மனைவி ஆனந்தாயி  என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார்.

சேர்வை, பிள்ளைகளை தைரியமாகவே வளர்த்தார். தன் தந்தை படைத் தளபதி என்பதால், அரசர் முத்து வடுகநாதரின் அரண்மனைக்குச் சென்று வந்தார். அரசரும் அவரை தம் பிள்ளைகளாக கருதினார்.

அவரின் மனைவி வேலுநாச்சியாரும், மருது பாண்டியர்களை அன்புடனே கவனித்து வந்தார். மருது சகோதரர்கள் கம்பீரமான காளைகளாக வளர்ந்தனர். அண்ணன் பெரிய மருது அமைதி என்றால், சின்ன மருது காட்டுத் தீ. 

மருது பாண்டியர்களின் நற்குணங்களால், படை வீரர்களும் அவர்களின் பேச்சை கேட்டு நடந்தனர். மருது சகோதரர்கள் எல்லோரையும் ஒன்றாகவே கருதினர்.

சின்ன மருது நாட்டை மேம்படுத்துவதிலேயே, காலத்தை கழித்தார். விவசாயத்தை பெருக்கினார். ஆங்கிலேய அதிகாரிகள் சிலர், வேலு நாச்சியாரிடம், வரி வசூல் பற்றி கேட்க, அதைப் பற்றி மருது சகோதரர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்றார். அவர்கள் மருது சகோதரர்களை சந்தித்து, வரி வசூல் பற்றிக் கேட்டனர்.

“எதற்கு வரி? ஏன் வரி? நாங்கள் எதற்கு உங்களுக்கு வரி கட்ட வேண்டும்?” என்று சின்ன மருது கேட்டார். “நவாப் வரி வசூலை எங்களிடம் ஒப்படைத்திருக்கிறார் ?” என்றார் ஒரு அதிகாரி.

சிவகங்கைப் போர்:

ஆங்கிலேய படைத் தளபதி ஸ்மித்துக்கு, சிவகங்கை மீது, பல நாட்களாகவே, ஒரு கண் இருந்தது. அமைதிப் பூங்காவாய் இருக்கும் சீமையை கைப்பற்ற யோசித்தார்.

ஆற்காடு நவாபும், கும்பினியாரும் எந்தவித முன்னறிவிப்பின்றி, சிவகங்கை மீது, போர் தொடுத்து வருவதை அறிந்த முத்துவடுக நாதன், மருது பாண்டியர்களை அழைத்து, ”வீர மறவர்களே, போர்க்களம் புகும் நேரம் வந்து விட்டது.

ஆண்மையிழந்த நவாபும், கும்பினி கடையும், நமது வீர மண்ணை நோக்கி வருகிறது. அவர்கள் இந்த மண்ணில் கால் வைப்பதற்குள், அவர்களை விரட்டி அடிப்போம்” என்று போர்க் குரல் கொடுக்க அரசே கவலை வேண்டாம். வரும் நரிகளை நாசமாக்குவோம்” என்று மருது சகோதரர்கள் வீரமுடன் கூறினார்கள்.

மருது சகோதரர்களை பார்த்து, “சிவகங்கை சீமையின் வீரத்தை பகைவருக்கு எடுத்துக் காட்டுங்கள். நானும் வருகிறேன். செல்லுங்கள்” என்று கூற, இருவரும் சிங்கமென தன் படைகளோடு கிளம்பினர்.

இவர்களிடம் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட போர் வீரர்கள் இருந்தனர். முத்துவடுக நாதன், தம் படைகளோடு காளையார் கோயில் காட்டுக்குள் நுழைந்தார். அங்கிருந்து அவர்களை தாக்க திட்டமிட்டிருந்தார் அவர்.

கும்பினியார் படையை ‘கர்னல் பான்ஷே’ நடத்தி வந்தார். காட்டுக்குள் நுழைவது என்பது, இயலாத காரியம் என்பதை உணர்ந்த பான்ஷேக்கு, என்ன செய்வது என்றே புரியவில்லை.

பான்ஷே, “ஒற்றர்களை அழைத்து, சிவகங்கை படையில் பணத்தாசை பிடித்தவர்களை கண்டு பிடித்து கொண்டு வாருங்கள்” என்றார். சில நாட்களின் தேடலுக்கு பின், பணத்தாசை பிடித்தவர்கள் தளபதியை சந்தித்தனர்.

அவர்கள் சிவகங்கை சீமை மன்னரை பிடிக்க, வழி அமைத்துக் கொடுத்தனர்.உடனே நவாப் படையும், மான்ஷே படையும் சிவகங்கை படையின் மீது பாய்ந்தன. இரு பக்கமும் கடுமையான எதிர்ப்புகள்.

ஒரு பக்கம் முத்துவடுக நாதன் எதிரிகளின் தலையை பந்தாடினார். இன்னொரு பக்கம் வேலு நாச்சியார் எதிரிப் படையினரின் உயிர்களை, தனது வாளால் பறித்துக் கொண்டிருந்தார்.

மற்றொரு பக்கம் மருது சகோதரர்கள், சரமாரியாக அன்னிய படையினரை துரத்தி, துரத்தி அடித்துக் கொண்டிருந்தனர். முதலில் நவாப் படை பின் வாங்கியது. பிறகு புதிய படை திருச்சியிலிருந்தும், மதுரையிலிருந்தும் படைகள் வர, வெறியுடன் சிவகங்கை படையை தாக்கினர். பான்ஷேயின் படையினர் சிவகங்கை கோட்டையை கடுமையாய் தாக்கி கைப்பற்றினர்.

சின்ன மருதுவின் திருச்சி பிரகடனம்:        

மருது, பாஞ்சாலங்குறிச்சி ஊமைத்துரை, சிவத்தையா தம்பி, மீனங்குடி முத்துக் கருப்பத் தேவர், சித்திரங்குடி மயிலப்பன் சேர்வை, விருப்பாச்சி கோபாலர், தேளி யாதுலர், பழசி கேரள வர்மா, மறைந்த திப்புவின் தளபதி தூந்தாகி வாக் ஆகியோருடன் ஆங்கிலேயருக்கு எதிராக தென்னிந்திய கூட்டமைப்பை உருவாக்கினர்.

1801 சூன் 12 ஆம் தேதி, சின்ன மருது திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை “ஜம்புத் தீவு பிரகடனம்” என அழைக்கப் படுகிறது. அவ்வறிக்கையின் மூலம், எல்லா இனங்களையும் சேர்ந்த மக்கள் நாட்டுப் பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்றும் அறைக்கூவல் விடுக்கப் பட்டது.

1857 சிப்பாய்க் கலகத்திற்கு அரை நூற்றாண்டிற்கு முன் நடந்த, ‘இந்திய தென்னிந்திய புரட்சி’யே முதல் ஒருங்கிணைந்த விடுதலைப் போராட்டமாக, பல வரலாற்று ஆய்வாளர்களால் கருதப் படுகிறது.

வேலு நாச்சியாரை மீண்டும் ஆட்சியில் அமர்த்திய சிங்கம்:

1772க்குப் பிறகு, காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள்,  சின்ன மருது கிளர்ச்சியை, 1779ல் தொடங்கி, ஆற்காட்டு நவாப், தொண்டைமான், கும்பினியார் ஆகியோரின் படைகளை வெற்றி கொண்டு, 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டு, வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போரில் பெரிய மருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர்.

இறப்பு:

வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத் துரைக்கு அடைக்கலம் தந்ததற்காக, 1801 மே 28ல், ஆங்கிலேயர் போர் தொடுத்தனர். இப்போர் 150 நாட்கள் இடையறாமல் நடந்து, மருது பாண்டியர் தூக்கிலிடப்பட்ட பின் தான் நின்றது.

1801 அக்டோபர் 24 அன்று, மருது பாண்டியர்களை தூக்கிலிட்டது, ஆங்கிலேய அரசு. இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தோரும், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப் பட்டனர்.

ஆங்கிலேயர்களிடம் பிடிபட்ட சின்ன மருதுவின் மகன் துரைச் சாமியும் மருதுவின் தளபதிகளும் “பிரின்சு ஆப் வேல்சு” (இன்றைய பினாங்கு) நாட்டுக்கு, நாடு கடத்தப் பட்டனர்.

முழு உருவச் சிலை:

மருது சகோதரர்களின் முழு உருவ கற்சிலைகள், சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் காளீஸ்வரர் கோயிலின் உட்புறமும், மருது சகோதரர்களின் சமாதி, காளீஸ்வரர் கோயிலின் எதிர்ப் புறமும் அமைக்கப்பட்டு உள்ளன.

தபால் தலை :

மருது சகோதரர்களின் படம் கொண்ட அஞ்சல் தலை, இந்திய அரசால் 2004 ஆம் ஆண்டு, அக்டோபர் 24 ஆம் நாள் வெளியிடப் பட்டது.

குருபூஜை :

இன்றும், இவர்களை சிறப்பிக்கும் வகையில், இவர்களது நினைவிடத்தில், “குருபூஜை விழா”, மூன்று நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம்.

  • பிரவின் குமார்

Share it if you like it

One thought on “மருது பாண்டியர் | சின்ன மருது | சுதந்திரம்75

  1. இது எல்லாம் வரலாறு. அதேபோல் இப்ப இருக்கும் குள்ளநரி கூட்டங்களை ஒழிக்க நாம் வரலாறு படைக்க வேண்டும் அதற்காக நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் கருத்துக்கு நன்றி

Comments are closed.