பாரதத் தாயின் தலை மகன்களில் ஒருவர் கணிதமேதை சீனிவாச ராமானுஜன் !

பாரதத் தாயின் தலை மகன்களில் ஒருவர் கணிதமேதை சீனிவாச ராமானுஜன் !

Share it if you like it

கணிதமேதை ராமானுஜனின் மாதா, பிதா, குரு, தெய்வம் :-

சனாதன தர்மம், நமது வாழ்க்கையின் மிக முக்கியமான, சிக்கெனப் பிடித்துக்கொள்ளவேண்டிய, பூஜிக்கவேண்டிய, மதிக்க வேண்டியவர்கள் நால்வர் என்கிறது. மாதா, பிதா, குரு, தெய்வம். இந்நால்வரின் ஆசிர்வாதமும், உதவியும் இருக்குமானால் உலகத்தின் எந்த சக்தியாலும் ஒருவரை நிறுத்தமுடியாது. நம் பாரதத்தில் காலம் காலமாக இதற்கான பல அருமையான உதாரணங்கள் உண்டு. ஆதி சங்கரர், சத்ரபதி சிவாஜி மஹாராஜா, லசித் பர்பூக்கன், நம் நரேந்திர மோடிஜீ என்று பல அருமையான உதாரண புருஷர்களை பாரதம் நமக்கு அடையாளம் காட்டியுள்ளது. இந்த உதாரண புருஷர்களுக்கு கிடைத்த மற்றொரு கொடை நல்லோர் சேர்க்கை. நண்பர், உறவினர், தொண்டர் என இவர்கள் எந்நாளும் நல்லோர் புடைசூழவே வலம் வந்திருக்கிறார்கள் (வந்துகொண்டிருக்கிறார்கள்).

இந்தவரிசையில் பாரத அன்னை ஈன்ற மற்றோரு மாமனிதன் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் (டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920). மிகச் சில காலமே இவ்வுலகில் இருந்தாலும், கணிதத்திற்கு இம்மாமேதை செய்த தொண்டுக்கு ஈடு இணை கிடையாது என்று சொல்லலாம். மேற்கத்திய கணித வல்லுநர்களால் இன்றும் ராமானுஜன், முடிவிலி அறிந்தவன் (The man who knew infinity) என்று பாராட்டப்படுகிறார்.

மாதா :-

கோமளத்தம்மாள் குடும்பம் ஒரு ஏழைக்குடும்பம். கணவன் ஸ்ரீநிவாசன், கும்பகோணத்தில் ஒரு ஜவுளிக்கடையில் மாதம் 20 ரூபாய் சம்பளத்தில் பணிபுரியம் ஒரு அன்றாடம்காட்சி. கணவனின் சொற்ப சம்பளத்தை வைத்து மட்டும் குடும்பம் நடத்திவிட முடியாது என்பதால், கொஞ்சம் நல்ல குரல்வளம் இருந்த, கோமளத்தாம்மாள் அவள் தெரு பக்தி பாடகிகள் குழுவில் பிரபலம். அதில் வரும் இரண்டோ ஐந்தோ, ஸ்ரீனிவாசனின் இருபதை, நூறாக ஆக்காவிட்டாலும், இன்னும் இருவேளை உணவுக்கு வழிசெய்தது.
இரண்டு வயதில் பெரியம்மை நோயால் பீடிக்கப்பட்ட ராமானுஜனை மீட்டெடுத்துவர அவள் பட்ட பாடு கொஞ்சமல்ல. அன்றுமட்டுமல்ல, என்றுமே ராமானுஜன் அவள் கண்ணின் மணி. வீட்டு வாசலில் இருந்த மர பெஞ்சில் அமர்ந்து ஸ்லேட்டில் கணக்கு போடும் பொடியன் ராமானுஜனை விளையாட அழைத்து தொல்லை செய்யும் தெருவின் மற்ற பொடியர் வகையறாக்களிடமிருந்து அவனைக் காக்க வீட்டு பரணில் அமர்த்தி ஸ்லேட்டையும் பல்பத்தையும் கொடுத்து பத்திரப்படுத்தியதில் இருந்து, சாப்பாடு அவன் கணக்கு போடுவதற்கு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக மணமான, மதராஸ் துறைமுக ஊழியன் ராமானுஜனுக்கு ஊட்டிவிட்டதெல்லாம் சொல்லிமாளாது. சாஸ்திரத்தில் கடல் தாண்டக்கூடாது என்பதற்காக வந்த கேம்பிரிட்ஜ் வாய்ப்பை வேண்டாம் என்ற ராமானுஜனை, தட்டிக்கொடுத்து போய்வா என்று தைரியம் கொடுத்தவள் கோமளத்தம்மாள். பின் குலதெய்வமாம் நாமகிரித்தாயார் ராமானுஜன் கனவில் வந்து அனுமதி கொடுத்தது தனிக்கதை.

பிதா :-

கோமளத்தாம்மாள் ராஜ்யத்தில் கணவர் ஸ்ரீனிவாசனுக்கு பெரிய முக்கியத்துவம் கிடையாது. குடும்பம் மிக வறுமையிலிருந்தாலும், கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியிலும் பின்னர் மதராஸ் பச்சையப்பன் கல்லூரியிலும் பரிட்சையில் தேறாமல், ஸ்லேட்டில் கணக்கென்று புரியா மொழியில் கிறுக்கிக்கொண்டிருந்த தோளுக்கு மேல் வளர்ந்த மகனை, அவர் ஒரு வாய் திட்டியது கிடையாது. அவன் வழி தனிவழியென நம்பிய இரண்டாவது ஜீவன் ஸ்ரீநிவாசன். இதற்கு மேல் இம்மனிதனின் மேன்மையை பறைசாற்ற வேறென்ன வேண்டும்.

குரு

ராமானுஜன் ஒரு சுயம்பு. அவனுக்கு கணிதம் தானாய் வந்தது. வீட்டின் ஏழ்மையைப்போக்க கோமளத்தம்மாள் கும்பகோணம் கல்லூரியில் பயிலும் இரு மாணவர்களை தன் வீட்டில் ஒரு சிறிய வாடகைக்குத் தங்க வைத்திருந்தாள். இந்த மாணவர்கள் மூலம் ராமானுஜனுக்கு இளங்கலை கல்லூரி கணிதப் புத்தகமொன்று கிடைத்தது. அதன்பின் சிலநாட்கள் ஸ்லேட்டுக்குச்சி இளங்கலை கணிதக் கிரீச்சிட்டது. பள்ளி ராமானுஜன் இந்த இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு கணிதம் சொல்லிக்கொடுத்ததாகவும் ஒருசாரார் கூறுவர். இதன்பின் ராமானுஜனின் கணிதப்பசியை போக்கியோர் பலர். கும்பகோணம் டவுன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஸ்ரீ. கிருஷ்ணசாமி ஐயர், ராமானுஜனுக்கு கல்லூரிப் படிப்பிற்கான ஊக்கத்தொகை கொடுத்து உதவினார். கும்பகோணம் கல்லூரி கணிதப் பேராசிரியர் ஸ்ரீ. சேஷு ஐயர், மெட்ராஸ் பச்சையப்பன் கல்லூரி கணிதப் பேராசிரியர் ஸ்ரீ. சிங்காரவேலு முதலியார் என ராமானுஜனின் கணிதப்பசிக்கு தீனிபோட்ட இந்தியர் ஆங்கிலேயர் என்று பலதரப்பட்ட கணித ஆர்வலர்களும் மேதைகளும் இதில் அடக்கம்.

பெருமுயற்சிசெய்து ராமானுஜனை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அழைத்துக்கொண்ட பெருமை மூன்று மிகப்பெரிய மேற்கத்திய கணித மேதைகளைச் சாரும். G. H. ஹார்டி, J. E. லிட்டில்வுட், E, H. நெவில் என்போர் அவர். இதில் ஹார்டியின் பங்கிற்கு நிகர் அவர் மட்டுமே. ராமானுஜனை மதராஸ் பல்கலைக்கழகத்தில் சந்தித்து பலமுறை உரையாடி அவன் இதயத்தை கரைத்து கேம்பிரிட்ஜ் வர சம்மதம் வாங்கிய பெருமை E. H. நெவிலைச் சாரும். இந்த வேலையை மெட்ராஸ் பல்கலைக்கழகத்துக்கு சிலகாலம் கணிதப்பாடம் எடுக்க வந்த E. H. நெவிலுக்கு கொடுத்தது G. H. ஹார்டி. ராமானுஜனை பட்டை தீட்டி மெருகேற்றிய பெருமை G. H. ஹார்டியையும், J. E. லிட்டில்வூட்டையும் சாரும். இது தவிர ராமானுஜனின் திறமை அறிந்து அவனை உலகத்துக்கு அறிமுகப்படுத்த அரும்பாடுபட்டோர் பலர் – ஸ்ரீ. ராமசாமி ஐயர், ஸ்ரீ. ராமச்சந்திர ராவ், மெட்ராஸ் துறைமுகத்தில் ராமானுஜனின் மேலாளர் ஸ்ரீ. நாராயண ஐயர் மற்றும் துறைமுகத் தலைவர் சர். பிரான்சிஸ் ஸ்ப்ரிங் மற்றும் மெட்ராஸ் மாநிலக்கல்லூரி கணிதப்பேராசிரியர் மிடில்மாஸ்ட் என்று ஒரு பெரிய பட்டாளம் அது. இதில் கணிதப்பேராசிரியர் மிடில்மாஸ்ட் எழுதிய அற்புதமான அறிமுகக் கடிதமே ராமானுஜனுக்கு மெட்ராஸ் துறைமுக வேலையை பெற்றுத்தந்தது. இதனை அற்புதமான வழிகாட்டிகளும், ஆசிரியர்களும் இல்லாவிடில் ராமானுஜன் கணக்குகள் ஒரு ஸ்லேட்டில் பிறந்து இரு கை மூட்டினால் இறந்திருக்கும்.

தெய்வம் :-

நம்மில் பலருக்கு ராமானுஜனின் பெருமைகளை உலகம் அறிய ஈரோடு நாமகிரித்தாயார் செய்த அனுக்கிரஹம் பற்றி தெரிந்திருக்கும். பல இடங்களில் ராமானுஜனே கணக்குகளை தான் சிந்திக்க மட்டுமே துவங்குவார் என்றும், அதற்கான விடைகளை அவன் கனவில் நாமகிரித்தாயார் அளிப்பாள் என்று பதிவிட்டிருக்கிறார். மொத்தத்தில் ராமானுஜன் பெயருக்கு முன்னால் கணித மேதை என்னும் இரு வார்த்தைகளைச் சேர்த்து அருளியது அவன் குலதேவி நாமகிரித்தாயார்.

நல்லோர் சேர்க்கை :-

ஒரு கட்டத்தில் கூண்டுக்கிளியாய், அவன் ஸ்லேட்டுக்கும், குச்சிக்கும், இரு கை மூட்டுகளுக்கு மட்டும் தெரிந்த அவன் கணித மேதாவிலாசத்தை உலகம் முழுவதும் கொண்டுசெல்ல உதவியவர்கள் பலர். இதில் சக்கரவர்த்தி ராஜகோபாலச்சரியாரின் பங்கு மிகப்பெரிது. கும்பகோணம் கலைக்கல்லூரித் தோழன் ராமானுஜனை, ஆந்திர நெல்லூர் மாவட்ட ஆட்சியாளராகவும், இந்திய கணித சமூகத்தின் காரியதரிசியாகவும் இருந்த ஸ்ரீ ராமச்சந்திர ராவ் அவர்களிடத்தில் மூன்று முறை கூட்டிச்சென்று, முடியாது என்று அவர் மறுத்த பின்னுமும் பிடிவாதமாய் இவன் மேதை என்று வாதாடி வென்ற வக்கீல் அவர். பின் ஸ்ரீ ராமச்சந்திர ராவ் அவர்கள், ராமானுஜனுக்கு மாத செலவுக்காக கொடுத்த இருபத்துஐந்து ரூபாய் அவன் கணிதப் பயணத்தின் பிள்ளையார் சுழி.

நம் ராமானுஜன் கதையில் ஒரு பாத்திரத்தின் பங்கு மிகப்பெரியது, ஆனால் அவர் அதிருஷ்டம் மிகச்சிலரே இவர் பற்றி பேசுவர். திரைப்படங்களில் கண்ணசைவில் மறைந்துவிடும் பாத்திரம் என்று ஒன்று உண்டு, கண் சிமிட்டும் நேரத்தில் இப்பாத்திரத்தின் பங்கு முடிந்து மறைந்துபோகும். அப்படி ஒரு பாத்திரம் ராமானுஜனின் மனைவி ஜானகி அம்மாள். பத்து வயதில் ராமானுஜனை மணமுடித்து, இருபத்தொன்றில் பறிகொடுத்தார், ஜானகி அம்மையார். ராமானுஜனின் குடும்பத்தாலேயே ஒதுக்கி இருட்டடிப்பு செய்யப்பட்டு, பின்னும் மனம் தளராமல் திருவல்லிக்கேணியில் ஒரு சிறிய வீட்டில் வசித்துக்கொண்டு, தையல் வேலை செய்து, பல இன்னல்களுக்கு மத்தியிலும் அவர் நினைவகலாமல் வாழ்ந்து 1994-ல் மறைந்தார். ராமானுஜனை நினைவில்கொள்ளும் ஒவ்வொரு முறையம் ஜானகி அம்மாளையும் நினைவு கொண்டு போற்றுவோம்.
தன்னம்பிக்கை, தோல்வி கண்டு துவளாமை, விடாமுயற்சி, நல்லோர் சேர்க்கை, தெய்வபக்தி என்ற ஐந்து மூலப்பொருள்கள் நம்மில் இருந்தால், வாழ்வில் வெற்றி என்பது தானாய்த் தேடி வரும் என்பதற்கான சிறந்த உதாரணம் நம் கணிதமேதை ராமானுஜம்,

பாரதத் தாயின் தலை மகர்களில் ஒருவராம் அவர் நினைவு போற்றி வணங்குவோம்.

எண்பத்தியொரு ஆண்டுகள் கழித்து நண்பர்கள் வடித்த சிலைகள் :-

தந்தை வேலை செய்த அலுவலகத்தில் அவருக்கு சிலை வைக்க, வரம் கொடுத்த சாமியின் தலையில் கைவைக்கத் தயங்காத இந்த உலகத்தில், தனக்கு கிடைத்த சம்பளம், தான் செய்த வேலைக்கு மிக அதிகம் என்றும், தன் உழைப்பை மிஞ்சிய சம்பளத்தை தகுதியுள்ள ஏழைக்குழந்தைகளின் படிப்புக்கு செலவு செய்யுமாறு கூறிய ஒருவரும் இத்தமிழ் திருநாட்டில் இருந்தார் என்பது ஒரு வேடிக்கை கலந்த வேதனையான செய்தி.

விந்தை மனிதன் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் :-

கேம்பிரிஜ்ஜில் மெதுவாக இறக்கை விரித்து பறக்கத் துவங்கிய ராமானுஜனின் கணிதப் பயணம், தவறான உணவு பழக்கத்தினால் தடுமாறியது. ராமானுஜத்தின் ஒருசாண் வயிறு ஒன்றரை கிலோ கணித மூளையிடம் தோற்று இரைந்தது. கணக்கு, கணக்கு, கணக்கு என்று தன்னுடலைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாததன் விளைவு, காசநோய். முதலில் இங்கிலாந்தில் காசநோய் சிகிச்சை பெற்று பின்னர் தாய்நாடு திரும்பப்போகும் ராமானுஜனுக்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும், ராமானுஜனின் வழிகாட்டியும் ஆத்ம நண்பனுமாய்ப் போன ஹார்டியும், மெட்ராஸ் பல்கலைக்கழகமும், இங்கிலாந்து அரசின் இந்திய அலுவலகமும் இணைந்து சில சலுகைகளைச் செய்ய முடிவெடுத்தார்கள்.

ஒன்று, ராமானுஜன் கணித ஆராய்ச்சி செய்ய ஏதுவாக அவரை மெட்ராஸ் பல்கலைகழகத்தில் பேராசிரியராக, மாதம் 400 ரூபாய் சம்பளத்தில் பணியமர்த்துவது. இரண்டு, மெட்ராஸ் பல்கலைக்கழகம் சார்பில் வருடம் ஒன்றுக்கு, கணித ஆராய்ச்சி ஊக்கத்தொகையாக 250 பவுண்ட். மூன்று, மெட்ராஸ் பல்கலைக்கழகம் கொடுத்த ஊக்கத் தொகைக்கு நிகராக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சார்பில் வருடம் ஒன்றுக்கு 250 பவுண்ட் கொடுப்பது என்று முடிவுசெய்தார்கள். ஒருவழியாக, மாத சம்பளமாக தந்தை ஸ்ரீநிவாசன், ஜவுளிக்கடையில் வாங்கிய 20 ரூபாய் மற்றும் பக்திப்பாடல் குழுவில் தாயார் கோமளத்தம்மாளுக்கு அவ்வப்போது கிடைத்த ஒன்றும் இரண்டும் வைத்து குடும்பம் நடத்திய காலம் போய், பணச்சாரல் வீச ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தது.

இவ்வளவு செழிப்பான வாய்ப்பு வந்தபோதும் ராமானுஜன் நினைவில் வந்ததோ அவர்கள் பழைய வாழ்க்கை. கும்பகோணம் கலைக் கல்லூரியில் முதல் தேர்வில் தோல்வியடைந்ததால் தான் ஊக்கத்தொகை இழந்தது, அதனால் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தியது, மெட்ராசில் தன் கணித ஆராய்ச்சிக்கு யாராவது உதவ மாட்டார்களா என்று அலைந்தது, பின்னர் ஸ்ரீ. ராமச்சந்திர ராவ் அவர்கள் கொடுத்த சொற்ப உதவித்தொகை மற்றும் சில கல்லூரி மாணவர்களுக்கு பாடம் எடுத்ததன் மூலம் கிடைத்த வருவாய் கொண்டு நாட்களை ஓட்டியதும் தான். ஆகையால் தன் உடல்நலக்குறைவு, அதற்காகும் மருத்துவ செலவு, தான் மற்றும் தன் குடும்பத்தார் எதிர்காலம் என எதையும் பொறுப்படுத்தாமல், ராமானுஜம் ஒரு முடிவெடுத்தார்.
அப்பொழுது இங்கிலாந்தில் இருந்த ராமானுஜன், அந்நாள் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் திரு. பிரான்சிஸ் டீயூஸ்பரிக்கு ஜனவரி 11, 1919 அன்று ஒரு கடிதம் எழுதினர். அந்தக் கடிதத்தின் (என்) தமிழ் மொழிபெயர்ப்பு இதோ.

அய்யா,

  தங்களுடைய 9வது டிசம்பர் 1918 தேதியிட்ட கடிதத்தை பணிவுடன் பெற்றுக்கொண்டேன். பல்கலைக்கழகம் எனக்கு மிகத்தாராளமாக உதவ முன்வந்துள்ளதற்கு மிகவும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

இங்கிருந்து நான் இந்தியா திரும்பியதும், எனக்கும் என் குடும்பத்தாருக்கும் வாழ்க்கை நடத்த தேவைப்படுவதற்கு மீறிய பண உதவியை தாங்கள் செய்துவிட்டதாகவே கருதுகிறேன். ஆகையால் இங்கிலாந்தில் எனக்கு அரசாங்கம் செய்த உதவித்தொகையை பிடித்தம் செய்துகொண்ட பின், ஆண்டொன்றுக்கு என் தாயார் மற்றும் குடும்பத்தார்க்கு 50 பவுண்ட் உதவி மற்றும் என் ஆராய்ச்சி செலவுகளும் போக மிஞ்சும் தொகையை ஏதாவது ஒரு கல்வி சார்ந்த காரியத்தில் செலவிட ஆவன செய்யக்கோருகிறேன். இத்தொகை கொண்டு ஏழை மற்றும் அனாதை மாணவர்கள் படிப்பு மற்றும் புத்தக செலவிற்கு பயன்படுத்தலாம் என்று மிகத் தாழ்மையுடன் பரிந்துரைக்கிறேன். நான் இந்தியா திரும்பியதும் இதற்கான ஆவன செய்வீர்கள் என நம்புகிறேன்.

உடல் நலக் குறைவினால் கடந்த இரு ஆண்டுகளாக என்னால் முழு முனைப்போடு கணித ஆராய்ச்சியில் ஈடுபட முடியாததற்கு என்னை மன்னிக்கக் கோருகிறேன். உடல் நலம் தேறியவுடன் கணித ஆராய்ச்சியில் மிகக் கடுமையாக உழைத்து, உங்கள் உதவிக்கு கைமாறு செய்து, தாங்கள் என்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு பாத்திரமானவனாக இருப்பேன் என்று உறுதிகூறுகிறேன்.

தங்கள் பணிவான ஊழியன்
எஸ் ராமானுஜன்

குறிப்பு: அன்றைய 1 பவுண்ட் என்பது இன்றைய மதிப்பில் சுமார் 140 பவுண்ட். ராமானுஜனுக்கு கேம்பிரிட்ஜ் மற்றும் மெட்ராஸ் பல்கலைக்கழகங்கள் கொடுப்பதாக சொன்ன உதவித்தொகை மட்டும் இன்றயமதிப்பில், வருடம் ஒன்றுக்கு சுமார் 74 லட்சம் ரூபாய்.

சம்பளம் வாங்கிய இடத்தை ஆக்கிரமித்து சிலைவைக்க முற்படும் மனிதர்கள் மத்தியில் அரசாங்கம் தன் சேவைக்கு கொடுக்க முற்பட்ட உதவித்தொகை, தன் தேவைக்கு மீறியது எனவும், தனக்கு தேவைப்பட்ட சிறுதொகை போக மீதத்தை எப்படி தகுதியான ஏழை மக்களுக்கு செலவு செய்யலாம் என்று ஆலோசனை சொல்லலும் நல்லோர் இருந்த மண்ணிலா நாம் இன்று இருக்கிறோம் என்று எண்ணத் தோன்றுகிறது.

வாக்குச்சுத்தம் உள்ளோர்க்கு வாக்களித்தால் இப்படி வக்கற்றா நாமிருப்போம், தமிழகமே! இனியாவது சிந்தித்து செயல்படு.
பின்குறிப்பு: கட்டுரைத்தலைப்பில் சொன்னது போல் ராமானுஜனுக்கு ஒரு சிலைவடிக்க அவன் இறந்து எண்பத்தியொரு ஆண்டுகள் ஆயிற்று. பத்து சிறிய நெஞ்சளவு வெண்கலச் சிலைகளை மினசோட்டா (அமெரிக்கா) நகர்வாழ், அமெரிக்க கொல்லர் ஒருவர் மூலம் செய்ய ஆவன செய்தது 1981ன் கணித உலகம். இந்தப் பத்தில் ஒன்று ராமானுஜனின் மனைவி ஜானகியம்மாள் வசித்துவந்த வீட்டுக் கூடத்தில் ஒரு திறந்த அலமாரியில் இருந்ததாகக் கேள்வி.

-ஆர். பி. ஆர்.


Share it if you like it