நாகூரில் தோளில் தூக்கலாம்… தருமபுரத்தில் தூக்கக் கூடாதா?

நாகூரில் தோளில் தூக்கலாம்… தருமபுரத்தில் தூக்கக் கூடாதா?

Share it if you like it

நாகூர் தர்காவில் ஆண்டவரின் சமாதிக்கு சந்தனம் பூசியவரின் கால் தரையில் படக்கூடாது என்பதற்காக அவரை இஸ்லாமியர்கள் தோளில் சுமந்து கொண்டு வீட்டில் கொண்டுபோய் விடலாம். ஆனால், தருமபுர ஆதீனம் பட்டினப்பிரவேசம் செல்லும் நிகழ்ச்சியில் பல்லக்கை பக்தர்கள் சுமந்து செல்லக் கூடாதா என்று ஹிந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

தமிழகத்தில் தற்போது மிகப்பெரும் விவாதப் பொருளாகி இருப்பது தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிதான். அதாவது, மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனம் மடத்தில் ஆண்டுதோறும் ஆதீனகுரு குருபூஜையன்று பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியின்போது ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் சுமந்துகொண்டு வீதியுலா செல்வது வாடிக்கை. ஆனால், மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப்பிரவேசம் தவறானது என்று சொல்லி இந்நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட திராவிட அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், நிகழாண்டு எதிர்வரும் 22-ம் தேதி தருமபுரம் ஆதீனம் மடத்தில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கு, திராவிடர் கழகத்தினர் வழக்கம்போல எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து, தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்து மே 2-ம் தேதி உத்தரவிட்டார் மயிலாடுதுறை கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி. இதுதான் ஹிந்துக்கள் மத்தியில் சூட்டைக் கிளப்பி இருக்கிறது. தமிழக அரசின் இச்செயலுக்கு தமிழகத்திலுள்ள ஆதீனகர்தர்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும், “வாடிகனில் போப்பாண்டவர் நாற்காலியில் அமர்ந்திருக்க அவரை கிறிஸ்தவர்கள் சுமந்து செல்லலாம். அதேபோல, நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடக்கும் உரூஸ் என்னும் சந்தனக்கூடு விழாவில், நாகூர் ஆண்டவரின் சமாதிக்கு சந்தனம் பூசும் நபரின் கால் தரையில் படக்கூடாது என்பதற்காக அவரை தோளில் சுமந்து கொண்டுபோய் வீட்டில் விட்டு விட்டு வரலாம். ஆனால், ஹிந்துக்கள் மட்டும் ஆதீன கர்த்தரின் பல்லக்கை சுமந்து செல்லக் கூடாதா?” என்று ஹிந்து அமைப்புகளும், ஹிந்துக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ஹிந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் கூறுகையில், “நாகூர் தர்காவில் காலம்காலமாக நடந்துவரும் சமாதிக்கு சந்தனம் பூசுபவரை இஸ்லாமியர்கள் தூக்கிச் செல்வதற்கு எதிராக திராவிடர் கழகத்தினர் ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை, போராடவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏன் கண்டிக்கவில்லை. அதேபோல, அந்த மாவட்ட ஆர்.டி.ஓ. ஏன் தடை விதிக்கவில்லை. மேலும், நாங்கள் கடவுள் இருக்கிறது என்று சொல்பவர்கள். அவர்கள் கடவுள் இல்லை என்று சொல்பவர்கள். அப்படி இருக்க, எங்களது நம்பிக்கையில் அவர்கள் ஏன் தலையிட வேண்டும்” என்று நீண்டதொரு விளக்கத்தை கொடுத்திருக்கிறார். இந்தக் காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, தருமபுரம் ஆதீனம் திருமடத்தில் பட்டினப்பிரவேசத்தில் பல்லக்கு சுமப்பது எங்களது சமய உரிமை. இதை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டோம். ஆகவே, இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு அனுமதி வழங்க வேண்டும் என்று பல்லக்கு சுமப்பவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.


Share it if you like it