ஸ்டாலின் நிகழ்ச்சியில் நிருபர் மீது தாக்குதல்!

ஸ்டாலின் நிகழ்ச்சியில் நிருபர் மீது தாக்குதல்!

Share it if you like it

முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் டி.வி. நிருபர் மீது பாதுகாப்பு வீரர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அனந்தமங்கலம், திருக்கடையூர், நல்லாடை ஆகிய பகுதிகளில் நடந்துவரும் நேரடி நெல் விதைப்பு மற்றும் ராமச்சந்திரன் வாய்க்கால் தூர்வாரும் பணிகள், இயந்திர குறுவை நடவு ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், திருக்கடையூர் ராமச்சந்திரன் வாய்க்காலில் தூர்வாரும் பணியை பார்வையிட்டு, நடந்த பணிகள் குறித்த புகைப்படக் கண்காட்சியையும் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஸ்டாலின் ஆய்வு செய்வதை புகைப்படம் எடுக்கவும், செய்தி சேகரிக்கவும் டி.வி. மற்றும் பத்திரிகை நிருபர்கள் வருகை தந்திருந்தனர்.

ஆனால், மாவட்ட அளவிலான தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் பத்திரிகை செய்தியாளர்கள் புகைப்படம் எடுப்பதை தடை செய்யும் விதத்தில், போலீஸார் நைலான் கயிறு கொண்டு கட்டி தடை ஏற்படுத்தி இருந்தனர். இதற்கு, செய்தியாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு, முதலமைச்சருடன் வந்திருக்கும் ஊடகத்துறையினர் செய்திகளை சேகரித்து சென்னையில் உள்ள செய்தி மற்றும் விளம்பரத்துறை மூலம் அனுப்பி விடுவார்கள் என்று தெரிவித்தனர். இதனால், லோக்கல் செய்தியாளர்கள் கடும் அதிருப்தியடைந்து, உள்ளூர் ஆளும் கட்சியினரிடம் முறையிட்டனர்.

இதையடுத்து, குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த மற்ற செய்தியாளர்கள் திமிறிக் கொண்டு உள்ளே சென்று புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது, போலீஸ்காரர்கள் பத்திரிகையாளர்களை கீழே தள்ளிவிட்டு அராஜகத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, முதல்வரின் பாதுகாப்பு படையில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் வேந்தர் டி.வி. நிருபரை ஆக்ரோஷமாக தள்ளிவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த நிருபர்கள், ’திமுகவினர் உள்ளே செல்லும்பொழுது, எங்களுக்கு அனுமதி இல்லையா?’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சூழலில், டி.வி. நிருபரை தள்ளி விட்ட காட்சிகள் அடங்கிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து விட்டு, கடந்த இரு தினங்களுக்கு முன்பு, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை வாயால் விமர்சித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய ஊடகத்துறையினரும், யூடியூப் சேனல் பேர்வழிகளிலும், டி.வி. நிருபரை தள்ளிவிட்ட முதல்வரின் பாதுகாப்பு அதிகாரியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Share it if you like it