சென்னை மாநகராட்சி மேயரை, அமைச்சர் காலில் விழவைத்த சம்பவம், கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதுதான் தி.மு.க.வின் சமூகநீதியா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேயர் பதவி என்பது இன்று நேற்றல்ல, ஆங்கிலேயர் காலத்திருந்து இருந்து வருகிறது. இந்தியாவுக்கு எப்படி ஜனாதிபதி முதல்குடிமகனோ, கவர்னர் எப்படி மாநிலத்தின் முதல் குடிமகனோ, அதேபோல, மாநகராட்சி மேயர் என்பவர் அந்த மாநகரத்தின் முதல் குடிமகனாக கருதப்படுபவர். அதோடு, நீதிபதிகள், கலெக்டர்களுக்கு எப்படி டவாலி இருக்கிறார்களோ, அதேபோல, மேயருக்கும் டவாலி உண்டு. ஆகவே, அமைச்சர்களாக இருந்தாலும் சரி, எம்.எல்.ஏ.க்களாக இருந்தாலும் சரி, மேயருக்கு கீழேதான். அப்படிப்பட்ட மேயரை அமைச்சர்களின் காலில் விழ வைத்து அசிங்கப்படுத்தி இருக்கிறது தி.மு.க. அரசு.
ஆம், முதல் முதலாக உருவாகி இருக்கும் தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராக புதிதாக பதவியேற்றிருப்பவர் வசந்தகுமாரி. இவரைத்தான் அமைச்சர்களின் காலில் விழ வைத்திருக்கிறார்கள். இதில், வேதனை என்னவென்றால், மேயர் வசந்தகுமாரி, மேயருக்கான அங்கி உள்ளிட்ட அனைத்து அம்சங்களுடன் இருக்கும்போது இச்செயலை செய்ய வைத்திருக்கிறார்கள். அதாவது, வசந்தகுமாரி மேயராக பதவியேற்கும் விழா, கடந்த 4-ம் தேதி நடந்தது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா (தாம்பரம்), கருணாநிதி (பல்லாவரம்) ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர், பதவியேற்பு விழா நடந்தது. பதவியேற்ற கையோடுதான் வசந்தகுமாரியை அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. காலில் விழவைத்திருக்கிறார்கள். இந்தக் காட்சியை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விட்டார்கள். இதைப் பார்த்துவிட்டுத்தான் சமூக ஆர்வலர்கள் முதல் நெட்டிசன்கள் வரை பொங்கி எழுந்திருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் சமூகநீதி பேசுகிறார்கள் தி.மு.க. தலைவர்கள். இதுதான் தி.மு.க.வின் சமூகநீதியா என்று கேள்வி எழுப்புகிறார்கள். தவிர, மேயர் வசந்தகுமாரி ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆகவேதான், அவரை அமைச்சர்கள் காலில் விழவைத்திருக்கிறார்கள் தி.மு.க.வினர் என்கிற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.