அமெரிக்கா, சீனா, ரஷ்யாவை விட, மத்திய கிழக்கில் இந்தியாவின் செல்வாக்குதான் அதிகரித்திருக்கிறது என்று, அமெரிக்க முன்னணி இதழில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது ‘பாரீன் பாலிசி’ இதழ். இந்த இதழின் கட்டுரையாளர் ஸ்டீவன் குரூக், மத்திய கிழக்கில் இந்தியாவின் செயல்பாடுகள் குறித்த சிறப்பு கட்டுரையை எழுதி இருக்கிறார். அக்கட்டுரையில், “மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் செயல்பாடுகள் கணிசமாக அதிகரித்திருக்கிறது. ஒரு காலத்தில் மத்திய கிழக்கில் அமெரிக்காதான் கோலோச்சி வந்தது. ரஷ்யா, சீனாவால்கூட மத்திய கிழக்கில் ஆழமாகக் கால் ஊன்ற முடியவில்லை. ஆனால், தற்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகமும், சவுதி அரேபியாவும் ஒரு காலத்தில் பாகிஸ்தானோடு நெருக்கம் காட்டி வந்தன. ஆனால், தற்போது தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது, பொருளாதார உறவை மேம்படுத்துவது ஆகியவற்றில் இந்த இரு நாடுகளும் இந்தியாவோடு இணைந்து செயல்பட்டு வருகின்றன. அதேபோல, இந்தியா – இஸ்ரேல் இடையேயான பாதுகாப்பு, தொழில்நுட்ப உறவும் செழித்தோங்கி வளர்ந்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டில் பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். இதன் பிறகு, இஸ்ரேலில் முதலீடு செய்ய இந்திய தொழிலதிபர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும், மத்திய கிழக்கில் அமைந்திருக்கும் எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனாவின் சரக்கு கப்பல்கள் செல்கின்றன. தற்போது, சீனாவுக்கு போட்டியாக சூயஸ் கால்வாய் பகுதியில் இந்தியாவும் ஆழமாக கால் பதித்து வருகிறது. இதற்கு இந்தியாவுக்கு பக்கபலமாக எகிப்து செயல்படுகிறது. எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிசி ஓராண்டில் 3 முறை இந்திய பயணம் மேற்கொண்டதால் இரு நாட்டு உறவும் வலுவடைந்திருக்கிறது. அண்மையில் பிரதமர் மோடியும் எகிப்து பயணம் மேற்கொண்டார்.
அதேபோல, சர்வதேச அரங்கில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியாவுடன் அமெரிக்காவும் கைகோத்து செயல்படுகிறது. இந்த சூழலில், மத்திய கிழக்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.