அதெல்லாம் அப்பவே செஞ்சிருக்கணும் சார், இத்தனை வயசுக்கு அப்புறம் இதெல்லாம் நடக்குமா? — இப்படிப்பட்ட வார்த்தைகளை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். கூடவே இதுக்கு ஒரு பழமொழியையும் ஆதரவாகக் காட்டுவார்கள் – ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
புதுசா ஒரு மொழியைக் கற்க வேண்டுமா? வண்டி ஓட்டப் பழக வேண்டுமா? புதுசா ஒரு கைத்தொழில் அல்லது கலையைக் கற்க வேண்டுமா? எதற்கெடுத்தாலும் வயது ஒரு சாக்கு. அதெல்லாம் சின்ன வயசிலேயே கத்துக்கிட்டிருக்கணும் சார், இப்போ கல்யாணம், குழந்தை குட்டின்னு ஆன பிறகு சான்ஸே இல்ல.
வாங்க, உங்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை.
மிஹிர்சென் – 16 நவம்பர், 1930ல் வங்காளத்தில் புருலியாவில் பிறந்தார். அவரது தந்தையார் ரமேஷ் சென்குப்தா ஒரு மருத்துவர். இவரது எட்டாம் வயதில் இவரது குடும்பம் வங்காளத்திலிருந்து ஒதிஷாவின் கட்டாக் நகரத்துக்குக் குடிபெயர்கிறார்கள். அங்கே நல்ல பள்ளிகள் இருந்தன என்ற ஒரே காரணத்திற்காக. புவனேஸ்வரத்திலுள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் தனது சட்டப்படிப்பை முடிக்கிறார் மிஹிர்சென். லண்டன் சென்று பார் அட் லா ஆக வேண்டும் என்பது மிஹிர்சென்னின் கனவாக இருந்தது. ஆனால் அதற்கேற்ற பொருளாதார வசதி அவரிடம் இல்லை. அவரது கனவு நனவாகும்படி குடும்ப நண்பர் ஒருவர் உதவி செய்ய வந்தார். அதனால் 1950ல் லண்டன் சென்றார் மிஹிர்சென். லண்டனிலுள்ள லிங்கன்ஸ் இன்னில் சேர்கிறார். பெரும்பாலும் நூலகத்திலிருந்து எடுத்து வந்த புத்தகங்களைப் படித்து தாமாகவே தேர்வுக்குத் தயாராகிறார். தேர்ச்சியும் பெற்று பார் அட் லா ஆகிறார் மிஹிர்சென்.
இதுக்கும் வயசுக்கும் என்ன சார் சம்மந்தம்? எல்லாம் படிக்க வேண்டிய வயசுலத்தானே படிச்சிருக்கார்னு ஒரு சந்தேகம் வரலாம். மிஹிர்சென் இந்தியாவில் புகழ்பெற்றது அவரது சட்டப்படிப்புக்காக கிடையாது. 1958ல் ஆங்கிலக் கால்வாயை நீந்தியே கடந்த ஆசியாவைச் சேர்ந்த முதல் மனிதர் என்பது அவரது பெருமைகளில் ஒன்று. அதன் பிறகு உலகின் ஐந்து கண்டங்களில் உள்ள பிற கால்வாய்களையும் ஒரே வருடத்தில் நீந்திக் கடந்த சாதனைக்கும் அவரே உரித்தானவர்.
27 செப்டம்பர் 1958. ஆங்கிலக் கால்வாயை டோவரிலிருந்து காலேய் வரைக்கும் 14 மணி நேரம் 45 நிமிடங்களில் நீந்திக் கடக்கிறார் மிஹிர்சென். இதுவரைக்கும் அவ்வாறு நீந்திக் கடந்தவர்களின் வேகத்தில் அடிப்படையில் இது நான்காவது இடமாகும்.
1966ம் ஆண்டு – ஐந்து கண்டங்களின் கால்வாய்களைக் கடக்க வேண்டுமென்ற தனது குறிக்கோளின் முதல் கட்டமாக இந்தியப் பெருங்கடலில் இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் பாக் ஜலசந்தியைக் கடக்கத் திட்டமிட்டார். அதன்படி ஏப்ரல் 5 & 6, 1966ல் தனுஷ்கோடியில் ஆரம்பித்து 25 மணி 36 நிமிடங்களில் இலங்கையை அடைந்தார். இவ்வாறே 1966ல் பிற நான்கு கண்டங்களிலுமுள்ள சமுத்திரங்களிலும் தனது சாதனையை நிறேவேற்றினார் மிஹிர்சென்.
இந்த சாதனைகளுக்கெல்லாம் அவருக்குத் தூண்டுகோலாக இருந்தது எது? 1950ல் ஒரு உள்ளூர் பத்திரிக்கையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஃப்ளோரன்ஸ் சாத்விக் என்ற பெண் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்ததைப் பற்றிய செய்தியைப் படித்தார். உடனே தாமும் அதுபோல சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. ஒரே ஒரு கஷ்டம் என்னவென்றால் அவர் நீச்சலில் அனுபவமே கிடையாது. அதன்பிறகு லண்டனிலிருந்து ஒய் எம் ஸி ஏவில் இணைந்து கடுத்தமான பயிற்சிகளை மேற்கொள்கிறார். பிறகு 1958ல், ஆமாம் செய்தியைப் படித்த எட்டு வருடங்களுக்குப் பிறகு, தனது 28வது வயதில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்கிறார்.
அதன் பிறகு 1966ல், அடுத்த எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு, தனது 36ம் வயதில் ஐந்து கண்டங்களில் உள்ள சமுத்திரங்களை ஒரே வருடத்தில் நீந்திக் கடக்கிறார் மிஹிர்சென்.
இப்போது சொல்லுங்கள் நண்பர்களே வயசாகிப்போச்சு என்று எல்லோரையும் போல மிஹிர்சென் நினைத்திருந்தால் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்க முடியுமா? வயசு எதற்கு தடையே இல்லை. ஆர்வமும் முயற்சியும் மட்டுமே தேவை. சோம்பேறித்தனத்திற்கு மறு பெயர்தான் வயசாகிப்போச்சே.
ஸ்ரீ அருண்குமார்