வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி : ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் !

வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி : ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் !

Share it if you like it

1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பிரிந்த வங்கதேசம் தனி நாடாக உருவெடுத்தது. அப்போது பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு வங்கதேச அரசு சார்பில் 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. பின்தங்கிய மாவட்டங்கள், பெண்கள், சிறுபான்மையினருக்கும் இடஒதுக்கீடானது வழங்கப்பட்டது.

இதன்படி, பல்வேறு பிரிவினருக்கு 56 விழுக்காடு இடஒதுக்கீடும், பொதுப் பிரிவினருக்கு 44 விழுக்காடு இடஒதுக்கீடும் அமலில் இருந்தது. இந்த இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து வங்கதேச கல்லூரி மாணவர்கள் கடந்த ஜூன் மாதம் போராட்டத்தை கையில் எடுத்தனர். இதில் இருநூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சுமார் இரண்டாயிரம் பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை 21-ஆம் தேதி, வங்கதேச சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டை ஐந்து விழுக்காடாக குறைத்தது. சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு 2 விழுக்காடு ஒதுக்கவும் உத்தரவிட்டது. இதன்படி கல்வி, அரசுப் பணிக்கான இடஒதுக்கீடு 7 விழுக்காடாக குறைக்கப்பட்டது. மீதமுள்ள 93 விழுக்காடு பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் மாணவர்களின் போராட்டம் ஓய்ந்தது.

இந்த நிலையில், போராட்டத்தை முன்னின்று நடத்திய ஆறு பேரை போலீசார் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்ததாகவும், அதில், மாணவர் சங்கமூத்த தலைவர்கள் நஷித் கான், ஆசிப் முகமது, அபுபக்கர் மஜும்தார் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சமூக வலைதளங்களில் இதுதொடர்பான வீடியோக்கள் பரவியதால், வங்கதேசம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் மீண்டும் வலுத்தது.

பிரதமர் ஷேக் ஹசீனா உடனே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் ஏற்பட்ட மோதலில் கடந்த சில நாட்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தலைநகர் டாக்கா உட்பட நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டன. சிராஜ்கஞ்ச் காவல் நிலையத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், 14 போலீசாரை படுகொலை செய்தனர். டாக்காவில் 2 முன்னணி செய்தி நாளிதழ்களின் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

பல்வேறு பகுதிகளிலும், சிறுபான்மையினரான இந்துக்கள் மற்றும் அவர்களது வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. பல்வேறு நகரங்களிலும் இஸ்கான் கிருஷ்ணர் கோயில், காளி கோயில்கள் தாக்கப்பட்டன. ரங்பூர் மாநகராட்சி கவுன்சிலர்களான இந்து மதத்தை சேர்ந்த ஹராதன் ராய், கஜோல்ராய் ஆகிய 2 பேரும் வன்முறை கும்பலால் கொலை செய்யப்பட்டனர். ராய்கஞ்ச் பத்திரிகை மன்றத்துக்குள் நுழைந்த வன்முறை கும்பல், பிரதீப்குமார் என்ற செய்தியாளரை கொடூரமாக கொலை செய்தது.

மேலும் டாக்காவில் உள்ள ஷேக் ஹசீனாவின் கட்சி அலுவலகம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. வங்கதேச தந்தை முஜிபுர் ரகுமானின் சிலை அடித்து நொறுக்கப்பட்டது. கலவரம் அதிகரித்த நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா தனது குடும்பத்தினருடன் டாக்காவில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு, டெல்லியில் தஞ்சம் புகுந்துள்ளார். பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டைவிட்டு ஷேக் ஹசீனா வெளியேறிவிட்டதாக கூறியுள்ள ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான், வங்கதேசத்தின் முழு பொறுப்பையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதனிடையே, நேற்று டாக்காவில் ஷேக் ஹசீனாவின் வீட்டுக்குள் நுழைந்த கும்பல், அங்கிருந்த விலை உயர்ந்த கலைப் பொருட்கள், பரிசுப் பொருட்கள், பண்ணையில் வளர்க்கப்பட்ட கோழிகள், மீன்கள் ஆகியவற்றை சூறையாடின. இதுதொடர்பான வீடியோக்களும் வலைதளங்களில் பரவி வருகின்றன.

இந்தியாவில் ஷேக் ஹசீனா தஞ்சமடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடியுடன் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, வங்கதேச நிலவரம் குறித்து பிரதமரிடம் அவர் எடுத்துரைத்தார். பிரதமர் இல்லத்தில் பாதுகாப்புக்கான அமைச்சரவை கமிட்டி நேற்று இரவு கூடி ஆலோசனை நடத்தியது. இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்று, வங்கதேச நிலவரம் குறித்து விளக்கினார்.

இந்தியாவும், வங்கதேசமும் 4,096 கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. வங்கதேசத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் இந்திய எல்லை பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *