திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டாரத்திலிருந்து, கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், ராதாபுரம் துணை வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள், லெவிஞ்சிபுரம் விலக்கில் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக சரல் மணல் ஏற்றிவந்த லாரிகளை மறித்து சோதனையிட்டபோது, உரிய கடவுச்சீட்டு இல்லாமலும், அளவுக்கு அதிகமாகவும் சரல் மணல் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, கனிமவளம் கடத்தல் தொடர்பாக பழவூர் போலீஸில் வட்டாட்சியர் புகார்அளித்தார். தொடர்ந்து, 3 லாரிகளை பறிமுதல் செய்த போலீஸார், அவற்றை ஓட்டிவந்த கோவில்பட்டி மதன், அம்பாசமுத்திரம் மணிகண்டன், தளவாய்புரம் பால்ராஜ் ஆகியோரைக் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 3 லாரிகளும், நெல்லை திமுக முன்னாள் எம்.பி. ஞானதிரவியத்துக்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.