வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு செய்த புகாரில் சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் முறையாக ஒப்புதல் பெற்று வழக்கை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அளித்த தீர்ப்பில், “வழக்கில் இருந்து ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டது செல்லாது. அவர் வழக்கு விசாரணையை எதிர்கொண்டு ஆக வேண்டும். எனவே சிறப்பு நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்யப்படுகிறது.
இந்த வழக்கில் ஐ.பெரியசாமி நாளை மறுநாள் ரூ.1 லட்சத்துக்கு பிணைத் தொகை செலுத்த வேண்டும். அடுத்த ஆண்டுக்குள் இந்த வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும். ஜூலை மாதத்துக்குள் வழக்கின் விசாரணையை தொடங்க வேண்டும்.” இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரான ஐ.பெரியசாமி, கடந்த 2008-ம் ஆண்டு அமைச்சராக பதவி வகித்தபோது, வீட்டுவசதி வாரிய வீடு ஒன்றை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக பணியாற்றிய கணேசனுக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், அந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த வழக்கில் கடந்த பிப்.13-ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்தது செல்லுமா, செல்லாதா என்பது குறித்து நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் நாளை தீர்ப்பளிக்கவுள்ளார்.
இதேபோல அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோருக்கு எதிராகவும் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்து வருகிறார். இதில் பா.வளர்மதி மீதான வழக்கு விசாரணைக்கு மட்டும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.