வடசென்னை பகுதிகளுக்கு விநியோகம் செய்ய செல்ல வேண்டிய சுமார் பத்துக்கும் மேற்பட்ட விநியோக வாகனங்கள் பால் பாக்கெட்டுகள் ஏற்றாமல் பண்ணை வளாகத்திலேயே நிற்பதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் அவர்கள் கடும் வறட்சியிலும் முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலில் பால் கொள்முதல் 31லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது என்று என்றைக்கு திருவாய் மலர்தருளினாரோ அன்றைய தினம் முதலே மாதவரம் பால் பண்ணையில் ஏழரை தொடங்கி விட்டது.
பால் பாக்கெட்டுகள் உற்பத்திக்கான பால் வரத்து மிகவும் குறைவான அளவிலேயே பால் பண்ணைக்கு வருவதால் நித்தமும் பால் விநியோகம் ஆறு மணியை தாண்டுவதால் ஆவின் பால் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்கள் அடையும் சிரமங்களும் மன உளைச்சலும் பொருளாதார இழப்பும் சொல்லிமாளாது.
இன்று (06.06.2024) கூட வடசென்னை பகுதிகளுக்கு விநியோகம் செய்ய செல்ல வேண்டிய சுமார் பத்துக்கும் மேற்பட்ட விநியோக வாகனங்கள் தற்போது வரை (அதிகாலை 4.00மணி) பால் பாக்கெட்டுகள் ஏற்றாமல் பால் பண்ணை வளாகத்திலேயே நிற்கும் சிறு, குறு மொத்த விநியோகஸ்தர்களுக்கு எப்போது பால் பாக்கெட்டுகள்
வழங்கி, அந்த விநியோக வாகனங்கள் எப்போது புறப்பட்டு வரும் என தெரியவில்லை. இதே நிலை தொடர்ந்தால் ஒன்று பால் முகவர்கள் தங்களின் ஆவின் பால் விநியோக தொழிலை கைவிட வேண்டும், அல்லது ஆவினையே கைவிட்டு தனியாருக்கு மாற வேண்டும். ஒருவேளை ஆவின் நிர்வாகம் இதைத் தான் எதிர்பார்க்கிறதோ..? இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.