கடந்த 45 ஆண்டுகளாக ஒரு மனிதர் சாப்பிடாமலேயே வாழ்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதிசயமாக இருந்தாலும் இதுதான் உண்மை.
நாம் இந்த உலகில் எத்தனையோ அதிசயமான மனிதர்களை பார்க்கிறோம். உதாரணமாக, கற்களை தின்னும் மனிதர்கள், மண்ணை தின்னும் மனிதர்கள், அவ்வளவு ஏன் பல்புகளை தின்னும் மனிதர்களைக் கூட கேள்விப்பட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம். ஆனால், சாப்பிடாமலேயே அதுவும் கடந்த 45 வருடங்களாக வாழும் மனிதரைப் பற்றி கேள்விப்படிருக்கிறோமா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் பதில் வரும். ஆனால், உண்மையிலேயே 45 ஆண்டுகளாக சாப்பிடாமலேயே வாழ்ந்து வருகிறார் ஒரு முதியவர், அதுவும் நமது தமிழ்நாட்டில் என்பதுதான் ஆச்சரியம்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கட்டையாண்டிபட்டியைச் சேர்ந்தவர் விவசாயி நல்லு. காவலாளியாக வேலை பார்த்து வரும் இவருக்கு வயது 80. இவரது மனைவி பெயர் அழகி. இத்தம்பதிக்கு 3 மகன்கள், 4 மகள்கள். அனைவருக்குமே திருமணம் ஆகிவிட்டது. நல்லு ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். எனவே, தனது 35-வது வயதிலிருந்து உணவு உண்ணுவதைத் தவிர்த்து விட்டு பால், பழம் என்று சாப்பிட்டு வந்தார். நாளடைவில் இதையும் மாற்றிக் கொண்டு, பால், டீ, குளுக்கோஸ் மற்றும் சத்து மாத்திரை போன்றவற்றை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வருகிறார்.
கிராம மக்களும், குடும்பத்தினரும் உணவு உட்கொள்ளும்படி எவ்வளவோ வலியுறுத்தியும் நல்லு உணவருந்த மறுத்து விட்டார். இவ்வாறு 45 ஆண்டுகளாக உணவே உட்கொள்ளாமல் இருப்பதால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், நல்லுவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்திருக்கிறார்கள். ஆனால், அவருக்கு உடலில் எந்த குறைபாடும் இல்லை என்றும், நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். தற்போது, வீட்டின் அருகே உள்ள புளிய மரத்தடியில் கட்டிலை போட்டு இரவு பகலாக அங்கேயே வசித்து வருகிறார் நல்லு. இந்த அதிசய முதியவரை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.