மிசா கைதிகள் பட்டியலை செல் அரித்து விட்டதாக ஒரு சிறை நிர்வாகமும், தானே புயலில் சேதமடைந்து விட்டதாக இன்னொரு சிறை நிர்வாகமும் கூறியிருக்கும் தகவல் நகைப்புக்குரியதாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி இருக்கின்றன.
தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், தான் ஒரு மிசா கைது என்று அடிக்கடி கூறிவருகிறார். ஆனால், இது கடந்த பல வருடங்களாகவே சர்ச்சையாக இருந்து வருகிறது. ஸ்டாலின் மிசாவில் சிறைக்குச் செல்லவில்லை. மிசா காலத்தில் வேறொரு காரணத்திற்காக சிறைக்குச் சென்றார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த சூழலில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, நேற்று முன்தினம் சிவகங்கையில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, ஸ்டாலின் மிசாவில் சிறைக்குச் செல்லவில்லை என்று கூறினார். இது தமிழக அரசியலில் மீண்டும் புயலைக் கிளப்பி இருக்கிறது. மேலும், ஸ்டாலின் உண்மையிலேயே மிசாவில்தான் சிறைக்குச் சென்றாரா? என்று கேள்வி ஒருபுறம் எழுந்து பெரும் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.
இந்த சூழலில்தான், மிசா கைதிகள் பட்டியல் தொடர்பாக ஆர்.டி.ஐ. மூலம் கேட்கப்பட்ட தகவலுக்கு சிறை நிர்வாகங்கள் அளித்த பதில் தொடர்பான அறிக்கையை பா.ஜ.க. வர்த்தக அணியின் துணைத் தலைவர் செல்வக்குமார், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த தகவலில் ஆர்.டி.ஐ. தெரிவித்திருக்கும் பதில்தான் அதிர்ச்சியடைய வைக்கிறது. அதாவது, பொள்ளாட்சியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர், மிசா கைதிகள் பட்டியலை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் (ஆர்.டி.ஐ.) கடந்த 25.6.2022-ம் தேதியன்று சிறைகள் மற்றும் சீர்திருத்தத்துறையிடம் கேட்டிருந்தார். இதற்கு பல்வேறு சிறைத்துறை நிர்வாகங்கள் பதில் அளித்திருக்கின்றன.
வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அலுவலகம் அளித்திருக்கும் தகவலில், காலக்கழிப்பு காரணமாகவும், செல் அரித்துவிட்டதாலும் கோப்புகள் கையாளமுடியாத நிலையில் இருப்பதால், தகவல் அளிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சேலம் மத்திய சிறை நிர்வாகமோ, சம்பவம் நடந்து 45 ஆண்டுகள் கடந்து விட்டதால், மிசா சட்டம் மூலம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களின் விவரங்களை அளிக்க முடியவில்லை என்று தெரிவித்திருக்கிறது. கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்திருக்கும் தகவலில், கடந்த 2011-ம் ஆண்டு கடலூரில் அடித்த தானே புயலில் பதிவறையில் இருந்த பழைய பதிவேடுகள் உருக்குலைந்து விட்டதாகத் தெரிவித்திருக்கிறது.
சிறைத்துறையின் இந்த பதில்கள்தான் மக்கள் மத்தியில் மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 100 வருடங்களுக்கு முன்பு சாவர்க்கர் எழுதியதாகக் கூறப்படும் மன்னிப்புக் கடிதத்தை பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வரும் நிலையில், வெறும் 45 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் தொடர்பான பதிவேடுகள் செல் அரித்து விட்டதாகவும், புயலில் உருக்குலைந்து விட்டதாகவும் சிறை நிர்வாகங்கள் கூறுவது நகைப்புக்குரியதாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், அ.தி.மு.க.வைச் சேர்ந்து எம்.பி. பாலகங்காவும், மிசா கைதி என்று சொன்னால் அசிங்கமாகி விடும் என்று கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.