மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.இந்தநிலையில் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தையே உலுக்கியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு முதுகலை பயின்று வந்த அந்த மாணவி பயிற்சி மருத்துவராக பணியில் இருந்து வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள கருத்தரங்கு அறையில் அரை நிர்வாணத்தில் உடல் முழுக்க காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனே மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணையை துரிதப்படுத்தினர்.
இதனை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனையில், அவர் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் தேடுதல் வேட்டையில் இறங்கிய நிலையில், கொல்கத்தா காவல்துறையோடு பணிபுரிந்த தன்னார்வலர் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.
பயிற்சி பெண் மருத்துவரின் இக்கொடூர கொலையை கண்டித்து கொல்கத்தாவில் உள்ள இளநிலை மருத்துவம் படிக்கும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய காவல்துறை, வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளனர். மேலும், சம்பவம் நடந்த மருத்துவமனை பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும், மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சரியான பாதுகாப்பு இல்லாததை கண்டித்து மாணவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சினை சரி செய்யும் வரை தொடர் போராட்டம் நடத்தப்போவதாகவும் முடிவு செய்துள்ளனர். இதனால், கர் அரசு மருத்துவமனை முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த மருத்துவமனையில் தேசிய மகளிர் ஆணையக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டுள்ளது மனித உரிமை ஆணையம். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மேற்கு வங்க மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி பகுதியை தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஷேக் ஷாஜகான், அங்குள்ள பழங்குடியினரை மிரட்டி அவர்களின் நிலங்களை எல்லாம் ஆக்கிரமிப்பு செய்தும்,ரேஷன் பொருட்களை மக்களுக்கு விநியோகிக்காமல் கடத்தியும், பழங்குடியின பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்களின் அட்டூழியங்களை தாங்க முடியாமல் அப்பகுதி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நாட்டையே அதிர்ச்சியடைச் செய்தது
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன. இதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுக்கிறாரா இல்லை என்று தெரியவில்லை. சந்தேஷ்காலி நிகழ்வு நடந்து சில தினங்களுக்கு பின் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளதால் மம்தா அரசின் மீது மேற்கு வங்க மாநில மக்கள் மட்டும் அல்லாமல் அனைத்து மாநில மக்களுமே கடுங்கோபத்தில் உள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மேற்கு வங்கம் மாறி வருவதாகவும், குற்றங்களை தடுக்க முடியாமல் திணறும் மம்தா பதவி விலக வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கொதித்தெழுந்து வருகின்றனர்.