அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டுப் பேசியதில் எந்தத் தவறும் இல்லை என்று நடிகர் விஜய்யின் தந்தையும், திரைப்படத் துறையின் மூத்த இயக்குனர்களில் ஒருவருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
2014-ம் ஆண்டு பாரத பிரதமராக பதவியேற்றவர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி. இவர், பதவியேற்ற நாள் முதலே நாட்டை சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும், இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாக்கி, வல்லரசு நாடாக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். இதற்காக, மேக் இன் இண்டியா உட்பட பல்வேறு திட்டங்களை தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தி வருகிறது. இவரது செயல்பாடுகளால் இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியடைந்த நாடாக இருக்கும் என்பதே உலக நாடுகளின் கருத்தாக இருந்து வருகிறது. மேலும், கொரோனாவுக்குப் பிறகு மற்ற நாடுகளைக் காட்டிலும் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கூடுதலாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ப்ளூ கிராஃப்ட் பவுண்டேஷன் என்கிற நிறுவனம் அம்பேத்கரும் மோடியும்: சிந்தினைவாதியும் செயல்வீரரும் என்கிற தலைப்பில் ஒரு புத்தகத்தை தயாரித்து தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதி வெளியிட்டது. அந்தப் புத்தகத்திற்கு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதி இருந்தார். அதில், அம்பேத்கருக்கு நிகரானவர் பிரதமர் மோடி என்று குறிப்பிட்டு, அதற்கு உதாரணமாக பெண்கள் முன்னேற்றம், முத்தலாக் தடைச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், மோடியை எப்படி அம்பேத்கருடன் ஒப்பிடலாம் என்று கூறி தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சியான வி.சி.க.வும் மற்றும் டுபாக்கூர் போராளிகளும் சமூக வலைத்தளங்களில் கம்பு சுற்றினார்கள். ஆனால், இளையராஜா இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. நான் சொன்ன கருத்து சொன்னதுதான். எதற்காகவும், யாருக்காகவும் எனது கருத்தை வாபஸ் பெறமாட்டேன் என்று உறுதியாகக் கூறி, போராளிகளின் மூக்கை உடைத்து விட்டார்.
இளையராஜாவைத் தொடர்ந்து, இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ், மோடியை விமர்சிப்பவர்கள் 3 மாத குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று சொல்லி உ.பி.ஸ்களையும், அம்பேத்கரிஸ்ட்களையும் மீண்டும் கதறவிட்டார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் நடந்த ‛பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் – புதிய இந்தியா 2022′ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது இவ்வாறு குறிப்பிட்டார் பாக்யராஜ். மேலும், இதற்கு ஒரு விளக்கத்தையும் கொடுத்தார். அதாவது, 3 மாத குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு வாயும், காதும் இருக்காது. ஆகவே, பிரதமர் மோடியின் நல்ல திட்டங்களைப் பற்றி பேசவும் மாட்டார்கள், பேசுவதை கேட்கவும் மாட்டார்கள் என்று ஒரே போடாகப் போட்டிருந்தார். இதற்கும் போராளிகள் சமூக வலைத்தளங்களில் கம்புசுற்றினார்கள். இதன் பிறகு, திரைப்பட இயக்குனர் பேரரசு, நடிகர் மாதவன், இயக்குனர், இசையமைப்பாளர், நடிகர், கதாசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட டி.ராஜேந்தர், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா என பலரும் மோடியை புகழ்ந்து பேசினார்கள். இதனால், உ.பி.ஸ்களும், சிறுத்தைகளும், போலி போராளிகளும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
இந்த நிலையில்தான், நடிகர் விஜய்யின் தந்தையும் திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு இசைஞானி இளையராஜா பேசியதில் தவறு இல்லை என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- “எனக்குத் தெரிந்ததைத்தான் நான் பேச முடியும், பேசத் தெரியும். தெரியாததை தெரிந்த மாதிரி நடிக்கத் தெரியாது. நான் படிக்கும்போது அம்பேத்கர்தான் இந்த நாட்டுக்கான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர், அதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் என்பதெல்லாம் அவரைப் பற்றி எனக்குத் தெரிந்தது. அதேபோல, மோடியைப் பற்றி சொல்ல வேண்டுமானால், மக்கள் முன்னேற வேண்டும், நாடு முன்னேற வேண்டும், இந்தியா முன்னேற வேண்டும் என்று பாடுபட்டு வருபவர். இன்னும் 10 ஆண்டுகள் கழித்து இந்தியா இப்படி இருக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு வருபவர் மோடி. ஆகவே, அம்பேத்கரையும், மோடியையும் ஒப்பிட்டுப் பேசியதில் தவறில்லை என்பதே எனது கருத்து” என்று கூறியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உ.பி.ஸ்களின் அடுத்த கதறல் ஆரம்பம்!