மோடி துபாய் பயணம் : இந்தியர்களுக்காக 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் ஸ்பெஷல் துபாய் விசா !

மோடி துபாய் பயணம் : இந்தியர்களுக்காக 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் ஸ்பெஷல் துபாய் விசா !

Share it if you like it

வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கிட்டதட்ட கொரோனாவுக்கு முந்தைய காலத்திற்கு இணையாக வெளிநாடு செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதிலும் குறிப்பாக வளைகுடாவில் அமைந்துள்ள ஐக்கிய அமீரகத்திற்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் தொடர்ந்து ஐக்கிய அமீரகம் சென்று வருகின்றனர்.

இதற்கிடையே, இந்தியாவிற்கும் துபாய்க்கும் இடையேயான பயணங்களை அதிகரிக்கும் வகையில் துபாய் புதிய விசா முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் இந்த விசாவை துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்தாண்டு மட்டும் இந்தியாவில் இருந்து 24.6 லட்சம் பேர் துபாய்க்கு சென்றுள்ளனர். இது கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடும் போது சுமார் 25 சதவீதம் அதிகமாகும். உலகின் மற்ற நாடுகள் உடன் ஒப்பிடும் போது இந்தியாவில் இருந்து தான் அதிகப்படியான பயணிகள் துபாய் சென்றுள்ளனர். கொரோனாவுக்கு முன்பு கடந்த 2019இல் சுமார் 19 லட்சம் இந்தியர்கள் துபாய் நாட்டிற்குச் சென்ற நிலையில், கொரோனா காலத்தில் அது வெகுவாக குறைந்தது. கடந்த 2022இல் அது 18 லட்சமாக இருந்த நிலையில், கடந்தாண்டு இது 24 லட்சமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் பயணிகள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 34 சதவீத அதிகரிக்கும் நிலையில், அங்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் எண்ணிக்கையில் இந்தியர்கள் தான் டாப்பில் உள்ளனர். இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையிலேயே இப்போது துபாய் ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் பிரத்யோகமான புதிய விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத் துபாய் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்தியாவிற்கும் துபாய்க்கும் இடையிலான பயணத்தை மேம்படுத்தவும், நீடித்த பொருளாதார ஒத்துழைப்பை வளர்க்கவும், சுற்றுலா மற்றும் வணிக உறவுகளை ஊக்குவிக்கவும் ஐந்து வருட விசாவை துபாய் அறிமுகப்படுத்தியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. இந்த 5 ஆண்டு விசா இருந்தால் ஒருவரால் பலமுறை துபாய்க்கு வந்து செல்ல முடியும். இந்த விசா கோரி விண்ணப்பித்தால் 2-3 நாட்களுக்குள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் துபாய்க்கு சென்ற பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it