இலங்கை வாழ் தமிழர்கள் மத்தியில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை எழுச்சியுரை ஆற்றிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கையில் ராஜபக் ஷே குடும்பம் நடத்தி வரும் ஊழல் ஆட்சி காரணமாக, தற்பொழுது அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. தமிழகம் எப்படி ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கியுள்ளதோ, அதே போன்று இலங்கையும் ஒரு குடும்பத்தின் கீழ் சிக்கியுள்ளது என்பதே நிதர்சனம். அந்த வகையில், தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக இலங்கையில் தற்பொழுது பசி, பஞ்சம், பட்டினி, வறுமை தலைவிரித்து ஆடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அத்தியாவசிப் பொருட்களின் விலை வரலாறு காணாத உச்சத்தில் இருக்கிறது. ஒரு லிட்டர் பால் பாக்கெட்டின் விலை 250 ரூபாய். இதுதவிர, அரிசி 500 ரூபாய், ஒரு ஆப்பிள் 150 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. அதோடு, சமையல் கேஸ் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. இதையடுத்து, மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இலங்கை மக்களின் நலன் கருதி மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. இதுதவிர, ஆர்.எஸ்.எஸ்.ஸின் கிளை அமைப்பான ‘சேவா இன்டர்நேஷனல்’ சார்பில் மலையக தமிழர்கள், ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் ஹெச்.எஸ்.எஸ். எனும் ஹிந்து ஸ்வயம் சேவக சங்கம் என்கிற பெயரில் செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உலக நாடுகளில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்க ‘அகண்ட தமிழ் உலகம்’ என்ற அமைப்பையும் நடத்தி வருகிறது. இந்த அமைப்பின், மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் இலங்கை மக்களுக்கு செய்யப்பட்டு வருகிறது.
இலங்கைக்கு கடந்த மாதம் இந்தியா 100 கோடி டாலர் கடன் உதவி வழங்கியுள்ளது. இதுதவிர, கூடுதலாக 50 கோடி டாலர் கடன் உதவியும் வழங்கியுள்ளது. மேலும், 760 டன் எடை கொண்ட மருந்துப் பொருட்களை மத்திய அரசு கொடுத்துள்ளது. ஏற்கெனவே, 40,000 டன் அரிசி மற்றும் பெட்ரோல், டீசலை இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழைப்பின் பேரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நான்கு நாட்கள் பயணமாக அந்நாட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து, ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அண்ணாமலை கலந்து கொண்டார். அந்த வகையில், இலங்கை வாழ் தமிழர்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசு செய்த பல்வேறு நன்மைகள் குறித்தும், இலங்கை மக்களின் துயர் துடைக்க இந்திய மத்திய பா.ஜ.க அரசு எப்பொழுதும் தயாராக இருக்கும் என்று உறுதி மொழி அளித்துள்ளார். தற்பொழுது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பயணத்துக்குப் பின் இலங்கையில் நிலவும் சூழல் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரிடம் அறிக்கையை பா.ஜ.க தலைவர் சமர்ப்பிப்பார் என்று கூறப்படுகிறது.