உயிரைக் காப்பாற்றும் மத்திய அரசு!
2022 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி, கிழக்கு ஐரோப்பாவில் உள்ள உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. 1991 ஆம் ஆண்டு, சோவியத் யூனியன் சிதறிய போது, அதன் ஒரு அங்கமாக இருந்த உக்ரைன், பிரிந்ததும் தன்னை ஒரு சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது.
உக்ரைனின் வடக்கே பெலாரசும், மேற்கே போலந்து, சுலோவாகியா, ஹங்கேரி போன்ற தேசங்களும், தெற்கே மால்டோவா, ருமேனியா போன்ற தேசங்களும், கிழக்கு மற்றும் வட கிழக்கு பகுதியில் ரஷ்யா இருக்கிறது. உக்ரைனின் மொத்தம் மக்கள் தொகை, சுமார் 4.41 கோடி.
மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை :
இந்தியாவைச் சேர்ந்த பல மாணவர்கள், உக்ரைனில் மேற்படிப்பு படிக்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு படிப்பதால், அவர்களை பத்திரமாக அழைத்து கொண்டு வர வேண்டும் என, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் அவர்களுக்கு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி, 2022 ஆம் ஆண்டு அன்று, கடிதம் எழுதினார்.
ஆப்ரேஷன் கங்கா :
போர்க்கால நடவடிக்கைகள் மூலம் துரிதமாக செயல்பட்ட மத்திய அரசு, உக்ரைனில் வாழும் இந்தியர்களின் உயிரை பத்திரமாக மீட்டு கொண்டு வர, பல நடவடிக்கைகளை எடுத்தது. தொடர்ந்து எல்லா நேரமும் எல்லா நாட்களும் (24/7) இயங்கும் வகையில், தொலைப்பேசி எண்ணை அறிவித்து, ஏதேனும் பிரச்சினை என்றால், குறிப்பிட்ட எண்ணில் அழைக்குமாறு தெரிவித்தது.
மேலும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில், “ஆப்ரேஷன் கங்கா” என்ற ஒரு புதிய கணக்கை, ட்விட்டர் தளத்தில் துவங்கி, யாருக்கும் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது மீட்டுக் கொண்டு வருவதில் ஏதேனும் உதவி தேவை என்றாலோ, அதில் தெரியப் படுத்தவும், மத்திய அரசின் மீட்பு நடவடிக்கைகளின் விவரங்களையும், மத்திய அரசு உடனுக்குடன், அதில் வெளியிட்டுக் கொண்டும் வருகின்றது.
சிறப்பு தூதர்கள் :
பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதியே, மத்திய அரசு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது. அதில், உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளில் இருந்து, மீட்பு விமானங்கள் மூலமாக, இந்தியர்களை அழைத்து வரும் முழு செலவையும் ஏற்பதாக அறிவித்தது.
உக்ரைன் நாட்டின் தெற்கு எல்லைப் பகுதியில் உள்ள ருமேனியா மற்றும் ஹங்கேரி வழியாகவும், விமானம் மூலமாக இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வர, மத்திய அரசாங்கம் துரிதமான நடவடிக்கை எடுத்தது.
பிப்ரவரி மாதம் இருபத்தி எட்டாம் தேதி, மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி அவர்கள், நான்கு மத்திய அமைச்சர்களை உக்ரைனின் அண்டை நாட்டிற்கு அனுப்பி, இந்தியர்களை பத்திரமாக மீட்கும் நடவடிக்கைகளில், ஈடுபடும் என அறிவித்தார்.
அதன்படி, ருமேனியா மற்றும் மால்டோவா நாடுகளுக்கு ஜோதிர் ஆதித்ய சிந்தியாவும், சுலோவாகியாவிற்கு கிரண் ரெஜிஜூவும், ஹங்கேரிக்கு ஹர்தீப் சிங் புரியும், போலந்திற்கு வி.கே. சிங்கும் சிறப்பு தூதர்களாக செல்வார்கள் என்று மத்திய அரசு தெரிவித்தது.
இந்தியர்களை மீட்கும் பணியில், இந்திய விமானப் படையின் “சி-17 குளோப் மாஸ்டர்” போர் விமானம் பயன்படுத்தப் படுகிறது. இந்த விமானம், எல்லா வானிலை சூழ்நிலைகளிலும், பயணம் செய்யும் வகையில், சிறப்புத் திறன் வாய்ந்தது.
இந்திய தேசியக் கொடிக்கு மரியாதை :
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மற்ற நாடுகளின் மாணவ – மாணவியரை மீட்க, அந்த நாட்டு அரசு, எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே, பாகிஸ்தான், துருக்கி, வங்காள தேசம், இலங்கையைச் சேர்ந்த மாணவ – மாணவியர்கள், இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தி, உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி வருவதாகவும், இந்திய தேசியக் கொடியை அசைத்து “பாரத் மாதா கி ஜே” என்று உரக்கக் கூறி, தங்களுடைய உயிரை பாதுகாத்துக் கொள்வதாகத் தெரிவிப்பது, மத்திய அரசின் மீட்பு நடவடிக்கைக்கு கிடைத்த, நற்சான்றாக கருதப் படுகின்றது.
ரஷ்யா செய்த உதவிகள் :
1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போரின் போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக, அவர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்காவின் மிகப் பெரியப் போர் கப்பல், கராச்சி கரையை நோக்கி வந்தது.
இந்திய தேசத்தின் பாதுகாப்பிற்காக, நாம் உதவி கேட்காமலே, மாஸ்கோவில் இருந்து ரஷ்யப் போர் கப்பல், இந்தியாவிற்கு ஆதரவாக கிளம்பியது. இதனால் அமெரிக்காப் படைகள் பின் வாங்கியது. ஒரு வேளை, ரஷ்யா தனது ராணுவக் கப்பலை அனுப்பாமல் இருந்து இருந்தால், இந்தியாவிற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்.
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் போது, நமது நாட்டின் பணத்தைக் கொடுத்து, வர்த்தகம் செய்துக் கொள்ளலாம். அப்படி ஒரு சலுகையை, நமக்கு மட்டுமே ரஷ்யா வழங்கி உள்ளது.
உக்ரைன் செய்த பாதகம் :
1998 ஆம் ஆண்டு, வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, நாம் அணுசக்தி சோதனையை, பொக்ரானில் செய்தோம்.
அதனைக் கடுமையாக எதிர்த்தது உக்ரைன், மேலும் எல்லா நாடுகளும், இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் எனவும், கோரிக்கை வைத்தது.
காஷ்மீர் குறித்து ஐ.நா. நிலைப்பாட்டின் படியே தீர்மானம் இருக்க வேண்டும் என்பதே, உக்ரைனின் நிலைப்பாடு. அதுவே, பாகிஸ்தானுடைய நிலைப்பாடும்.
எல்லா இடங்களிலும் திருக்குறளை மேற்கோள் காட்டி வரும் பாரதப் பிரதமர் அவர்கள், “நன்றி மறப்பது நன்றன்று…” என்ற வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப, கடந்த காலங்களில் ரஷ்யா நமக்கு செய்த உதவிகளையும், அதே நேரத்தில், உக்ரைன் நமக்கு செய்த பாதகங்களையும் கவனத்தில் கொண்டு, ஐ.நா.வில் நடந்த ஓட்டெடுப்பை, நமது பாரத நாடு புறக்கணித்தது.
அமைதி நிலவ, இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க, ரஷ்ய அதிபர் புதினுடன், பேசினார், பாரதப் பிரதமர் மோடி அவர்கள்.
தீர்க்க தரிசனம் :
நமது நாட்டில், மருத்துவப் படிப்புக்கான இடம், மிகவும் குறைந்த அளவே உள்ளது. எனவே தான், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவ – மாணவியர்கள், மருத்துவம் படிக்க வெளிநாட்டிற்குச் செல்கின்றார்கள். இந்தக் குறையைப் போக்க, எல்லா மாநிலங்களில் நிறைய மருத்துவ கல்லூரிகளை தொடங்க வேண்டும் எனவும், அதற்கு உண்டான உரிய நிலங்களை, மாநில அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், நமது நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், நமது மண்ணிலேயே மருத்துவம் படிப்பதற்கு, இது உறுதுணையாக அமையும்” எனவும் பாரதப் பிரதமர் அவர்கள் கருதினார். எனவே தான், “மாவட்டம் தோறும் மருத்துவக் கல்வி” என்ற திட்டத்தை முன் எடுத்து, மத்திய அரசு செயல் படுத்தி வருகின்றது.
இக்கட்டான இத்தகையச் சூழலில், உக்கிரமானப் போர் நடைபெறும் நேரத்தில், மத்திய அரசு எல்லா வகையிலும், இந்தியர்களை மீட்க முயற்சி செய்து வருகின்றது.
அதைக் குறை காணும் நோக்கில், ஏதாவது ஒரு கருத்தைச் சொல்லி அரசியல் செய்யாமல், மத்திய அரசுக்கு துணை நிற்க வேண்டும். இந்தியர்களை பாதுகாப்பாக மீட்கப் பட வேண்டும் என்பதே, நமது பிரதான குறிக்கோளாக இருக்க வேண்டும்.
அரசியல் செய்வதைத் தவிர்த்து…
இந்தியராய் ஒன்று பட்டு…
நமது மக்களை மீட்டெடுக்க…
நாம் துணை புரிவது…
நமது தலையாயக் கடமை ஆகும்…
- அ. ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai