மத்திய பிரதேச மாநிலத்தில் 5 புதிய வந்தே பாரத் ரயில்களை பாரதப் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதையடுத்து, பா.ஜ.க. சார்பில் போபாலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் இவ்வாறு பேசினார் :
“முத்தலாக்கை யார் யாரெல்லாம் ஆதரிக்கிறார்களோ, அவர்களெல்லாம் வாக்கு வங்கிப் பசியில் இருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாமியப் பெண்களுக்கு அநீதி இழைக்கிறார்கள். முத்தலாக், இஸ்லாமியப் பெண்களைத் தாண்டி மொத்த குடும்பத்தையே சீரழித்துவிடும். சரி அப்படியே முத்தலாக் இஸ்லாமிய மதத்தில் மிக அவசியமானது என்றால், எதற்காக கத்தார், ஜோர்டான், இந்தோனேசியா, பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் அது தடைசெய்யப்பட்டிருக்கிறது.
இரண்டு விதிமுறைகள் இருந்தால் குடும்பம் நன்றாக இயங்குமா. அதுபோல இரண்டு விதமான சட்டங்கள் இருந்தால் நாடு நன்றாகச் செயல்படுமா… நம்முடைய அரசியலமைப்பு அனைவருக்கும் சம உரிமையை வழங்குகிறது. பொது சிவில் சட்டமும் அதன் ஒரு பகுதியே. உச்ச நீதிமன்றமும் அதை அமல்படுத்தச் சொல்கிறது. ஆனால், எதிர்க்கட்சியினர் பொது சிவில் சட்டத்தின்பேரில் மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். இதன் மூலம் எந்தெந்த அரசியல் கட்சிகள் தங்களைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் பெறுகிறார்கள் என்பதை இஸ்லாமியர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
அவர்களின் திருப்திப்படுத்துதல் அரசியலுக்கு இஸ்லாமியர்கள் பலியாகிவிட்டனர். எனவே, இஸ்லாமியர்கள் இது போன்ற அரசியலுக்குப் பலியாகாமலிருக்க, பா.ஜ.க-வினர் இஸ்லாமியர்களிடம் சென்று இது பற்றி கற்பிக்க வேண்டும்”. மேலும், பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியதைச் சாடிய மோடி, “ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையிலிருந்து தப்பிக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. ஊழல் தலைவர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் காப்பாற்ற முயல்கின்றனர். ஆனால், அவர்களில் யாரையும் நான் விட்டுவைக்க மாட்டேன். ஒவ்வோர் ஊழல்வாதியையும் கடுமையாகத் தண்டிப்பேன்” என்று கூறினார்.