ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வரின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை வெளியிட மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
தெலுங்கு திரை உலகின் ஜாம்பவான் என்று அழைக்கப்படுபவர் என்.டி.ஆர். இவர், தெலுங்கு மொழி பேசும் மக்களின் வீடுகளில் இன்றும் தெய்வமாக வாழ்ந்து வருபவர். திரைத்துறையில் சாதித்து, தனிகட்சி துவங்கி அதன் மூலம் முதல்வராக பொறுப்பு ஏற்றுகொண்டவர் இருவர். அதில், ஒருவராக தமிழகத்தை ஆண்ட எம்.ஜி.ஆர் உள்ளார். மற்றொருவர், ஆந்திர மாநிலத்தை ஆண்ட என்.டி.ஆர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர், 1982 -ல் தெலுங்கு தேசம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். ஆந்திராவை ஊழலில் இருந்தும், திறமையற்ற நிர்வாகத்திடமிருந்து மீட்கப் போவதாக கர்ஜித்தார். இதையடுத்து, 1983-ல் நடந்த பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளிலும் போட்டியிட்ட ராமாராவின் தெலுங்கு தேச கட்சி, 199 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, தொடர்ந்து மூன்று முறை ஆந்திர மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்படிப்பட்ட சூழலில், என்.டி.ஆரின் 100-வது பிறந்த நாள் வெகு விரைவில் வர உள்ளது. இந்த நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடும் விதமாக என்.டி.ஆர். குடும்பத்தை சேர்ந்தவர்களும், அக்கட்சியை சேர்ந்த தலைவர்களும் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், என்.டி. ராமராவ் அவர்களின் பேரனும் தெலுங்கு திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர், தனது தாத்தாவின் திருவுருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயத்தை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார். இதனை, ஏற்றுக் கொண்ட மோடி அரசு அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்தான தகவலை, பா.ஜ.க. மூத்த தலைவரும், அம்மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளருமான விஷ்ணுவர்தன் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.