பாரதப் பிரதமர் மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தனது நன்றியை தெரிவித்து கொண்டார் உக்ரைன் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே நீண்டகாலமாகவே எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் இணைய உக்ரைன் நாடு விரும்புகிறது. எனினும், இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக பனிப்போர் தொடர்ந்து வருகிறது. இதையடுத்து, உக்ரைன் எல்லை பகுதியில் அதிக அளவில் படைகளை குவிக்க தொடங்கியது ரஷ்யா. இதனை தொடர்ந்து, இரு நாடுகள் மத்தியில் போர் மூண்டது.
இதுதான், தற்போது உலகம் முழுவதும் பேசுப் பொருளாக மாறியுள்ளது. உலகின் மிகப்பெரிய ஐனநாயக நாடான இந்தியாவின் உதவியை உக்ரைன் தூதர் நாடினார். அந்தவகையில், பாரதப் பிரதமர் மோடி இருநாட்டு அதிபர்களிடமும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு போரை முடிவுக்கு கொண்டு வருமாறு வேண்டுகோள் விடுத்தார். உலக நாடுகளும் இதே கருத்தினை இந்தியாவிடம் வலியுறுத்தி இருந்தது என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.
இதனிடையே, ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை அண்மையில் இந்தியா ஏற்றுக் கொண்டது. இதனை தொடர்ந்து, அதுகுறித்து பேசுவதற்காக பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தனது அமைதி திட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் உக்ரைன் அதிபர் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் போர் காரணமாக உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய 22,500 இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உதவுமாறு ஜெலன்ஸ்கியிடம் இந்திய பிரதமர் கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளதற்கு இந்திய பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்தை தெரிவித்தேன். அமைதியை செயல்படுத்துவதில் இந்தியாவின் பங்களிப்பை நான் நம்புகிறேன். ஐ.நா.வில் இந்தியா அளித்த மனிதாபிமான உதவி மற்றும் ஆதரவுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.