பாரதப் பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் புகழ்ந்து பேசியிருப்பது அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். கட்சி தலைவர் சோனியா காந்தியின் தீவிர ஆதரவாளராக பார்க்கப்படும் இவரின் கருத்து, சமீப காலமாக அக்கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பையும், கடும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பல மாநில சட்டமன்ற தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்து வருகிறது. கட்சியின் தோல்விக்கு ராகுல் காந்தியின் செயல்பாடுகளே காரணம் என பல மூத்த தலைவர்கள் கடும் விமர்சனம் செய்ய துவங்கினர். கட்சிக்குள் முறையாக தேர்தல் நடத்தி தலைவர்களை தேர்ந்தெடுக்காவிட்டால் இன்னும் 50 வருடத்திற்கு எதிர்க்கட்சி வரிசையில் தான் காங்கிரஸ் உட்கார நேரிடும் என்று குலாம் நபி ஆசாத் கருத்து தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து, கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்த மூத்த தலைவர்களை சோனியா குடும்பம் கட்டம் கட்டி ஒதுக்க துவங்கியது. இதில், குலாம்நபி ஆசாத், அம்பிகா சோனி, மோதிலால் வோரா, மல்லிகார்ஜுன கார்கே போன்றவர்களின் பதவிகளை பறித்தார் சோனியா காந்தி. இதையடுத்து, ப.சிதம்பரம் உட்பட எந்த ஒரு மூத்த தலைவரும் ராகுல் காந்திக்கு எதிராக குரல் கொடுக்காமல் கள்ள மெளனம் காத்து வந்தனர்.
அந்த வகையில், உத்ராகாண்ட், உ.பி, கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், 4 மாநிலங்களில் பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால், காங்கிரஸ் போட்டியிட்ட 5 மாநிலங்களிலும் வரலாறு காணாத அளவில் படுதோல்வியை தழுவியது. இந்நிலையில், நாள் முழுதும் உழைக்கும் பிரதமர் மோடியை எதிர்கொள்ள, அவரை விட இரண்டு மடங்கு உழைக்கிற நபரை, விரைவில் காங்கிரஸ் தலைமைக்கு கொண்டு வர வேண்டும் என ப.சிதம்பரம் பேசியுள்ளார். இவரின், இந்த கருத்து கட்சி தொண்டர்களையும் தாண்டி ராகுல் காந்தி ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.