கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமசிவம் மற்றும் கல்யான சுந்தரம் ஆகியோர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. இதில் கள்ளச்சாராயம் அருந்திய 5 பெண்கள் ஒரு திருநங்கை உட்பட 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிகிச்சையில் இருக்கும் 12 பேர் முழுமையாக கண்பார்வையை இழந்திருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மரணத்தை பற்றி சிபிஐ விசாரணை வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக ஆளுநரிடம் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் தமிழக அரசோ தனிநபர் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிப்பதாக கூறியது. முதல்வர் ஸ்டாலின் அரசு இதற்கு முன் தனிநபர் விசாரணை ஆணையம் அமைத்த வரலாற்றை பார்ப்போம்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தை கண்டுபிடிக்க ஆறுமுகச்சாமி கமிட்டி வைத்தது. ஆனால் இதுவரை அந்த வழக்கின் நிலவரம் தெரியவில்லை. தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கை விசாரிக்க அருணா ஜெகதீசன் கமிட்டி வைத்தனர். அந்த வழக்கின் நிலவரமும் இதுவரை தெரியவில்லை. ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் நீட் தேர்வு குறித்த கமிட்டி ஒன்றை உருவாக்கினர். அதனுடைய நிலவரமும் என்னவென்று தெரியவில்லை. இதனை கமிட்டி அமைத்தும் வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. வெறும் கண்துடைப்புக்காக கமிட்டி ஒன்றை அமைத்து விசாரிப்பதாக கூறுகின்றனர். இந்த வழக்கில் மட்டும் என்ன நடந்து விடப்போகிறது. இதுவும் சிறிது காலம் கழித்து காணாமல் போய்விடும். அதற்குள் ஹிந்தி திணிப்பு என்று வேறொரு பிரச்சனையை நடுவில் கொண்டு வந்து இந்த சம்பவத்தை மறக்கடித்து விடுவர்.
மேலும் டெல்லிக்கு ஒருநாள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றுள்ளார். அங்கு மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளை சந்திக்க உள்ளதாகவும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து பலி ஏற்பட்டது தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி விவாதிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கள்ளச்சாராய பலி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேட்ட நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி இன்றைய பயணத்தின்போது அதுபற்றி உள்துறை அமைச்சக அதிகாரிகளிடம் எடுத்துரைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆளுநர் ஆர்.என். ரவியின் டெல்லி பயணம் திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. இதனால் அவரது இந்த பயணத்தை திமுகவினர் உற்று கவனிக்க தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் இன்று தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினர் குஷ்பு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த காவலர்களிடம் அவர் கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்புகள் தொடர்பாக விசாரணை நடத்தினார். மேலும் திரட்டப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலீஸாரிடம் கேட்டறிந்தார். அவருடன் தேசிய மகளிர் ஆணைய குழு பணியாளர்கள் உடன் இருந்தனர்.
காவல்துறை அதிகாரிகளிடம், இறந்தவங்க எல்லாம் 20,21 என இளம் வயதுதான். கிட்டத்தட்ட 61 பேர் இறந்திருக்காங்க. கள்ளசாராயத்தால புருஷனை இழந்து கைக்கொழந்தையோட நிக்கிறாங்க. அவங்களுக்கு என்ன பதில் சொல்ல போறிங்க. தினக்கூலி வாங்குற மக்களுக்கு கள்ளச்சாராயம் எப்படி அவ்வளவு சுலபமா கிடைக்குது. அப்படி அவ்வளவு சுலபமா கிடைக்குதுன்னா அந்த விஷயம் உங்களுக்கு தெரியாம இருக்குமா ? இவ்வாறு கேள்வி கேட்க பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறினர். இந்த காணொளியானது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து குஷ்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், வழக்கின் பின்புலம் குறித்து விசாரித்து வருகிறோம். தற்போது வரை இந்த விவகாரத்தில் 21 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஏற்கனவே கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர்கள் எத்தனை பேர், புதிதாக கைதானவர்கள் எத்தனை பேர். ஏற்கனவே கைதானவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்ப பின்னணி குறித்தும் விசாரிக்க உள்ளோம். இன்று தான் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்பதால் இழப்பீடு தொடர்பாக எதுவும் கூற முடியாது. மேலும் நான் மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இந்த விசாரணையை மேற்கொள்கிறேன். இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை. ஏற்கனவே உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் காவல் நிலையத்தில் ஆய்வு செய்த குஷ்பு, அவர்களிடம், காவல் நிலையம் அருகிலேயே பெண்கள் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். அப்போது காவல் துறையினர் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் ஆளுங்கட்சிக்கே சாதகமாக இருப்பதாக கடந்த கால புள்ளி விவரம் கூறுகிறது. அதிமுகவும் போட்டியில் இருந்து விலகி விட்டதால் ஆளும் திமுகவின் வெற்றி இன்னும் எளிதாக இருக்கும் என்றே அரசியல் அரங்கில் கணிக்கப்பட்டது.
ஆனால் இப்போது கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்களும், அதை ஒட்டி சூடுபிடிக்கும் அரசியலும் திமுகவுக்கு இடைத்தேர்தல் களம் அவ்வளவு எளிதாக இருக்காது என்பது போன்ற சூழலை உருவாக்கியுள்ளன. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் ஆளும் திமுக அரசுக்கு எதிரான வலுவான அஸ்திரமாக எதிர்க்கட்சிகளுக்கு மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.