மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, மேற்கு வங்க அரசு ஊழல் தலைவர்களை கொள்ளையடிக்க அனுமதிக்கிறது. மிரட்டி பணம் பறிக்கும் தலைவர்களை பாதுகாப்பதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது. அவர்களை பாதுகாப்பதற்காக மத்திய விசாரணை அமைப்பு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துகிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியலமைப்பை திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணிக்கிறது என்று அவர் கூறினார்.
பல்வேறு விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடும் அளவுக்கு மாநிலத்தில் சூழல் நிலவுகிறது. மாநிலத்தில் ஏழைகளுக்கான மத்திய அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு தடையாக உள்ளது. மத்திய நிதியை ஏழை மக்களை சென்றடைய டிஎம்சி அனுமதிப்பதில்லை.மேற்கு வங்கம் முழுவதும் டிஎம்சியின் சிண்டிகேட் ராஜ்ஜியம் நடந்து வருகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
திரிணாமுல் காங்கிரஸின் ஊழல் தலைவர்களிடம் இருந்து 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறிய மோடி, ஊழல் தலைவர்கள் கொள்ளையடித்த பணம், ஏழை மக்களுக்கு திரும்ப வரும் என்றும் மோடி தெரிவித்தார்.
நான் ஊழலை அகற்ற வேண்டும் என கூறுகிறேன். எதிர்க்கட்சிகள் ஊழல்வாதிகளைக் காப்பாற்றுங்கள் என்று சொல்கிறது. ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவதையும், ஏழைகளுக்கு நீதி கிடைப்பதையும் உறுதி செய்வேன். ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு ஊழல்வாதிகள் மீது மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மோடி தெரிவித்தார்.