சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் அருகே ‘மஸ்ஜித்-ஏ-ஹிதாயா’ என்ற பள்ளிவாசல் அமைந்துள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்குச் சொந்தமான இடத்தில், கட்டுமான ஒப்புதல் இல்லாமல் கட்டுப்படுவதாகக் கூறி, கடந்த 2020ஆம் ஆண்டு உள்ளூர் அதிகாரிகளால் இந்த மசூதியின் கட்டுமானப் பணிக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால், அதை மீறி சட்டவிரோதமாக பள்ளிவாசல் கட்டப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மசூதி ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டதை உறுதி செய்ததுடன், அதனை இடிக்குமாறு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மசூதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. அத்துடன், நடப்பு ஆண்டு மே 31ஆம் தேதியுடன் மசூதியை இடிக்க வேண்டும் என கால அவகாசமும் கொடுத்திருந்தது.
உச்ச நீதிமன்றம் அளித்த கால அவகாசம் முடிவடைந்த நிலையில், ஜூன் 15ஆம் தேதிக்குள் மசூதியை இடித்துவிட வேண்டும் என காவல்துறை தரப்பிலிருந்து மசூதி நிர்வாகத்திற்கு கடிதம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கூடி மசூதி இடிப்பிற்கு எதிராக போரட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பள்ளிவாசல் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “மசூதி இருக்கும் நிலம் பேருந்து நிலையத்திற்குச் சொந்தமான இடம் என்று கூறுகிறார்கள். குறிப்பாக, இந்த இடத்தை முறைப்படி 43 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி பத்திரப்பதிவு செய்துள்ளோம்.
ஆனால், சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட சில சமூக விரோதிகள், பள்ளிவாசலை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். அரசு நினைத்தால், இந்த பள்ளிவாசல் இடிக்கப்படுவதில் இருந்து பாதுகாத்து மக்களிடம் கொடுக்கலாம். எனவே, இது குறித்து முதலமைச்சர் எங்களுக்கு ஆவணம் செய்ய வேண்டி கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்தார்.
மேலும், போராட்டத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் காவல்துறையினர் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை அடுத்து, பாதுகாப்பு கருதி அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். அதன் பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களை போலீசார் கைது செய்தனர்.