கந்துவட்டி கொடுமையால் தாய் மகள் இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆற்காடு பகுதியை சேர்ந்த கார்த்திகா என்பவர் விசிக பிரமுகர் ராஜன் என்பவரிடம் 45 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். பின்னர் வட்டியுடன் சேர்த்து 54 ஆயிரம் ரூபாயை ராஜனிடம் திருப்பி கொடுத்துள்ளார். முழு பணம் கொடுத்த பிறகும் ராஜன் பணம் கேட்டு கார்த்திகாவை மிரட்டி உள்ளார். இதனால் மனஉளைச்சல் அடைந்த கார்த்திகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அங்கு நடவடிக்கை எடுக்காததால் விரக்தி அடைந்த கார்த்திகா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது மகள் நந்தினியுடன் சென்று அங்கே இருவரும் தனது உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோல் கும்பகோணத்தில் விசிக பிரமுகர் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கும்பகோணம் பேருந்து நிலையம் அருகே பாத்திமா புரத்தை சேர்ந்தவர் விசிக பிரமுகர் அலெக்ஸ். இவரது மனைவி ரூபீன்ஸா கும்பகோணம் மாமன்ற கவுன்சிலராக உள்ளார். இவர்களது வீட்டில் சந்தேகத்திற்குரிய மர்ம நபர்கள் தங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து வீட்டை சோதனை செய்ய காவல்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். இதற்கு அலெக்ஸ் மற்றும் அவரது வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் தாங்கள் நீதிமன்ற அனுமதி வாங்கி வந்திருப்பதாக கூறி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் உள்ளே படுக்கை அறையில் இருந்த கட்டிலுக்கு கீழ் சிலர் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர். விசாரணையில் அவர்கள் கிங் ஆண்டனி, அர்னால்ட் ஆண்டனி,பாலுசாமி, அருண்குமார் (எ) அஜய் என்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு உடையவர்கள் என்றும் தெரிய வந்தது. அவர்களிடம் கத்தி உள்ளிட்ட 22 கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி கவுன்சிலரின் கணவர் விசிக பிரமுகர் அலெக்ஸ்ஸையும் போலீசார் கைது செய்தனர்.