‘சித்து மூஸ்வாலாவை போல கொல்லப்படுவீர்’: சல்மான் கானுக்கு வந்த மிரட்டல் கடிதம்!

‘சித்து மூஸ்வாலாவை போல கொல்லப்படுவீர்’: சல்மான் கானுக்கு வந்த மிரட்டல் கடிதம்!

Share it if you like it

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவைப் போல கொல்லப்படுவீர்கள் என்று சல்மான் கானுக்கு வந்த மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

மும்பை பாலிவுட்டை சேர்ந்த பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சல்மான் கான். 2 ஃபிலிம் பேர் விருதுகள், 2 தேசிய திரைப்பட விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத்துறையில் இருந்து வரும் சல்மான் கான், நடிகர், தயாரிப்பாளர் என பல்வேறு அவதாரங்களை எடுத்திருக்கிறார். 56 வயதாகும் சல்மான் இதுவரை திருமணமே செய்துகொள்ளவில்லை. அதேசமயம், பாலிவுட் நடிகைகளுடன் இணைத்து பரபரப்பாக பேசப்பட்டவர். அதேபோல, சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். 2018-ம் ஆண்டு மான் வேட்டையாடியதாக இவர் மீது வழக்கு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை சலீம் கான். இவரும் நடிகர் மற்றும் எழுத்தாளர்தான்.

இந்த நிலையில், இன்று காலை சல்மான் கானின் தந்தை சலீம் கான், வாக்கிங் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி இருக்கிறார். அப்போத, வீட்டின் முன்பு ஒரு கடிதம் கிடந்திருக்கிறது. அந்தக் கடிதத்தை பிரித்து படித்தபோது, தனக்கும் தனது மகனுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்படிருந்ததை பார்த்து அதிர்ந்து போனார். அக்கடிதத்தில், “சலீம் கான், சல்மான் கான் பஹோத் ஜல்ட் துமாஹ்ரா மூஸ்வாலா ஹோகா” என்று எழுதப்பட்டிருந்தது. அதாவது, “சலீம் கான், சல்மான் கான் நீங்கள் இருவரும் சித்து மூஸ்வாலாவை போல கொல்லப்படுவீர்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. மேலும், அக்கடிதத்தில் G.B., L.B. என்கிற இனிஷியல்களும் இருந்தது. இதில், G.B. என்பது கோல்டி ப்ரார் கும்பல் தலைவனின் பெயர். அதேபோல, L.B. என்பது லாரன்ஸ் பிஷ்னோய் பெயரின் சுருக்கம். இவர்கள் இருவருமே முக்கிய புள்ளிகளை மிரட்டி பணம் பறித்தல், பணத்துக்காக கொலை செய்தல், கடத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள்தான். இவர்களில் கோல்டி பிரார் தற்போது கனடாவில் இருக்கிறார். லாரன்ஸ் பிஷ்னோய் டெல்லி திகார் சிறையில் இருக்கிறார்.

சல்மான் கானை கடந்த 2011-ம் ஆண்டே கொல்ல திட்டமிட்டவர் லாரன்ஸ் பிஷ்னோய். ‘ரெடி’ திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, தனது கும்பலைச் சேர்ந்த நரேஷ் ஷெட்டி என்பவனிடம் சல்மான் கானை தாக்கும் பணியை கொடுத்திருந்தான். ஆனால், ஆயுதம் கிடைக்காததால் அத்தாக்குதலை திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை. அதேபோல, 2018-ம் ஆண்டு மான் வேட்டையாடிய வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சல்மான் கானை அக்கும்பல் தாக்குதல் நடத்த முயன்று முடியாமல் போகவே, மிரட்டி விட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, பஞ்சாபி பாடகரும், அரசியல்வாதியுமான சித்து மூஸ்வாலா, இதே லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்களால் பஞ்சாப் மாநிலம் மான்ஸா கிராமத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது அதே கும்பலிடம் இருந்து கொலை மிரட்டல் கடிதம் வந்திருக்கிறது. இதுகுறித்து, சலீம் கான் போலீஸில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் ‘கிரிமினல் மிரட்டல்’ குற்றமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கியிருக்கும் பாந்த்ராவில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்புகளைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.


Share it if you like it