என்.எஸ்.டி.எல். நிறுவனத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில், பேச்சின் நடுவே அந்நிறுனத்தின் நிர்வாக இயக்குநர் தண்ணீர் கேட்க, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது மேஜை மீது வைத்திருந்த குடிநீரை தானே எடுத்துக் கொண்டு போய் கொடுத்தது இணையத்தில் அனைவராலும் பாரட்டப்பட்டு வருகிறது.
என்.எஸ்.டி.எல். (National Securities Depository Limited) எனப்படும் தேசிய பங்குகள் வைப்பு நிறுவனத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சி மும்பையிள்ள ஒரு ஹோட்டலில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். மாணவர்களுக்கான முதலீட்டாளர் விழிப்புணர்வு திட்டத்தையும், என்.எஸ்.டி.எல்.லின் 25 ஆண்டு கால பயணத்தை சிறப்பிக்கும் அஞ்சல் தலையையும் நிர்மலா சீத்தாராமன் வெளியிட்டார். முன்னதாக, என்.எஸ்.டி.எல். நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பத்மஜா சுந்துரு பேசிக்கொண்டிருந்தார். நீண்ட நேரம் பேசியதால் அவருக்கு தண்ணீர் தேவைப்பட்டது. எனவே, அங்கிருந்த ஒருவரிடம் தண்ணீர் தருமாறு கேட்டார். இதை கவனித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது மேஜை மீது வைக்கப்பட்டிருந்த குடிநீரை தானே எடுத்து வந்து கொடுத்தார். மகிழ்ச்சியடைந்த பத்மஜா, அவரை பாராட்டி அன்புடன் நன்றி கூறினார். இதனைக் கண்டு அரங்கத்தினர் அசந்து அவரின் எளிமையான செயலை பாராட்டினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி அனைவரின் பாரட்டையும் பெற்று வருகிறது. இதை மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, நிதியமைச்சரின் எளிமையை பாராட்டி இருக்கிறார்.