சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், மும்பையில் அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிர மாநிலம் கோரேகான் பகுதியில் அமைந்திருக்கிறது பத்ரா சால். இப்பகுதியில், 600-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் 1,034 கோடி ரூபாய்க்கு நில மோசடி நடந்திருப்பதாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், அவரது மனைவி வர்ஷா ராவத் மற்றும் சஞ்சய் ராவத்திற்கு நெருக்கமான பிரவீன் ராவத், சுஜித் பட்கர் ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே பிரவீன் ராவத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இதனிடையே, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தை ஜூலை 20, 27-ம் தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், சஞ்சய் ராவத் ஆஜராகவில்லை. இதனிடையே, சஞ்சய் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில், மராட்டிய மொழியில் ஒரு ட்வீட் வெளியிட்டிருந்தார். அப்பதிவில், “எனக்கு எந்த ஊழலிலும் தொடர்பு இல்லை. இதை நான் சிவசேனா தலைவர் பால் தாக்கரே மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். நான் சிவசேனாவுக்காக தொடர்ந்து போராடுவேன். என் உயிர் போகும் நிலை வந்தாலும்கூட கட்சியை விட்டு நீங்க மாட்டேன். சரணடைய மாட்டேன். ஜெய் மகாராஷ்டிரா” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், அமலாக்கத் துறை அதிகரிகள் நேற்று சஞ்சய் ராவத் வீட்டிற்கே நேரில் சென்றனர். மத்திய தொழில் பாதுகாப்புப் படை துணையுடன் சஞ்சய் ராவத் வீட்டிற்கே சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள், காலை 7 மணிக்கு விசாரணையை தொடங்கினர். அப்போது, பத்ரா சால் சாவடியை மறுசீரமைப்பு செய்த விவகாரத்தில், ராவத்தின் மனைவி மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் பெயரில் நடந்துள்ள வங்கிப் பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர், அமலாக்கத்துறை அதிகாரிகள் சஞ்சய் ராவத்தை கைது செய்து அழைத்துச் சென்றனர்.