மும்பையில் பயங்கரவாதி யாகூப் மேமன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கல்லறை எழுப்ப முற்சிகள் நடந்திருப்பதோடு, எல்.இ.டி. விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், 1993-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இத்தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்திற்கு நிதியுதவி செய்ததோடு, மூளையாகவும் செயல்பட்டவன் யாகூப் மேமன். எனவே, மேமனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி நாக்பூர் சிறையில் மேமனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பின்னர், அவனது உடல் மும்பைக்கு கொண்டுவரப்பட்டு மரைன் லைன்ஸில் உள்ள படா கப்ரிஸ்தானில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில்தான், பயங்கரவாதி யாகூப் மேமன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பளபளக்கும் வெள்ளை பளிங்குக் கற்களால் கல்லறை எழுப்ப முயற்சிகள் நடந்திருப்பதோடு, சமாதியும் பச்சைக் கலர் எல்.இ.டி. விளக்குகள் பொறுத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பயங்கரவாதி யாகூப்பின் கல்லறை இருளிலும் பளிச்சென மக்கள் பார்க்கும் வகையில், 5 ஹைமாஸ் விளக்குகள் பொருத்தப்பட்டு, ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
இதையடுத்து, மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதனிடையே, மகாராஷ்டிர மாநில பா.ஜ.க. தலைவரும், அமைச்சருமான சுதிர் முங்கந்திவார், “இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணைக்கு ஃபட்னாவிஸ் உத்தரவிட்டிருக்கிறார். பல அப்பாவி மக்களைக் கொன்ற மும்பை குண்டுவெடிப்புக்கு காரணமான ஒரு பயங்கரவாதியின் கல்லறையை அழகுபடுத்துவது ஒரு ஆபத்தான விஷயம். பயங்கவாதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தை கல்லறையாக மாற்ற முயற்சிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, சிவசேனா கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மீது பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டி வருகின்றனர். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணிக் கட்சிகளை மகிழ்விப்பதற்காக, உத்தவ் தாக்கரே இப்படியொரு இழி செயலை செய்திருப்பார் என்று கூறிவருகின்றனர். மேலும், பயங்கரவாதியான யாகூப் மேமனின் கல்லறையை அழகுபடுத்த உத்தவ் தாக்கரே எப்படி அனுமதி வழங்கினார் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே, கல்லறையில் அலங்கரிக்கப்பட்டிருந்த எல்.இ.டி. விளக்குகளையும், ஹைமாஸ் விளக்குகளையும் போலீஸார் அகற்றி இருக்கின்றனர்.