கர்நாடக மாநிலம் ஹுப்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர், நிரஞ்சன் ஹைமாத். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் நேஹா ஹைமாத். அங்குள்ள பல்கலை ஒன்றில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்துவந்தார். இதே கல்லூரியில் பெலகாவியைச் சேர்ந்த ஃபயாஸ் என்பவரும் பி.சி.ஏ. படித்து வந்தார். இந்த நிலையில், ஃபயாஸ், நேஹாவை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். அவர் தனது காதலை பலமுறை நேஹாவிடம் தெரிவித்துள்ளார். ஆனால் ஃபயாஸின் காதலை, நேஹா ஏற்கவில்லை என தெரிகிறது. ஆனாலும் நேஹாவை ஃபயாஸ் தொடர்ந்து தொந்தரவு செய்துவந்துள்ளார். மேலும் அவரை, நேஹா கண்டித்துள்ளார்.
இதனால் நேஹா மீது ஆத்திரத்தில் இருந்த ஃபயாஸ், நேற்று (ஏப்ரல் 18) தேர்வு எழுதிவிட்டு மதியம் வெளிவந்த நேஹாவை, தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியுள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த நேஹா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து நேஹாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் கல்லூரியின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் தப்பியோடிய ஃபயாஸையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மாணவியின் படுகொலை சம்பவம் மாநிலத்தில் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. அவருடைய கொலை, லவ் ஜிகாத்தாலேயே ஏற்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். இதில் ‘லவ் ஜிஹாத்’ இருப்பதாக நான் நம்புகிறேன். சிறுமி காதலிக்க மறுத்ததால், அவர் கொலை செய்யப்பட்டார். காங்கிரஸ் ஆட்சியில், சட்டம் ஒழுங்கு இல்லை” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.