பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்து வருபவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே நின்றுகொண்டு, அவரின் ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, அப்பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், சாலையில் நின்றுகொண்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கை பட்டாக் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது தடுக்க முயன்ற இருவரையும் மர்ம கும்பல் வெட்டியுள்ளது.
இதையடுத்து, மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். தொடர்ந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ஆம்ஸ்ட்ராங் அப்பகுதியில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு, கிச்சைக்காக ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்க்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த செம்பியம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெரம்பூர் பகுதியில் பதற்றம் நிலவி வருவதால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட இடத்தில் வடக்கு இணை ஆணையர் அபிஷேக் தீக்ஷித் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
மேலும், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல வந்து கொலையை அரங்கேற்றியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், படுகொலை செய்த மர்ம கும்பலைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கூடியுள்ளதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், ஆம்ஸ்ட்ராங் வீட்டின் அருகே உள்ள பேப்பர் மில்ஸ் சாலையில் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தும், காவல்துறையினருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் 8 பேர் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆற்காடு சுரேஷின் பிறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் அல்லது நினைவு நாளுக்கு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார் ஆற்காடு சுரேஷின் தம்பி ஆற்காடு பாலு.
ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளிலேயே நினைத்தது நல்லபடியாக முடிந்ததாக ஆற்காடு பாலு வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், இன்று சென்னையில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரமான நேரத்தில், அவரது குடும்பத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தொண்டர்கள் அனைவருடனும் தமிழ்நாடு பாஜக ஆறுதலாக துணை நிற்கிறோம்.
நம் சமூகத்தில், வன்முறைக்கும் மிருகத்தனத்துக்கும் இடமில்லை, ஆனால் கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில், தமிழகத்தில் அதுவே வழக்கமாகி விட்டது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துவிட்டு, மாநிலத்தின் முதல்வராக தொடரும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறதா என்று மு.க.ஸ்டாலின் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.
கோவை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில்,
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சென்னையில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தலைநகர் சென்னையில் அதுவும் முதலமைச்சர் ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக உள்ள கொளத்தூர் அருகே ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் கொல்லப்பட்டிருப்பது, தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
அமைதி பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளாக ரவுடிகளின் அட்டகாசம் தலைதூக்கி இருக்கிறது. காவல்துறையினர் முழுக்க முழுக்க திமுக நிர்வாகிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதால், அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. திமுகவின் வட்டச் செயலாளர், கிளைச் செயலாளர் முதல் உயர்மட்ட நிர்வாகிகள் வரை காவல்துறைக்கு உத்தரவிடுகின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளுக்கும் இதுதான் காரணம். தலைநகர் சென்னையில் ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கும் இதுதான் காரணம். திரு ஆம்ஸ்ட்ராங் படுகொலையால் சென்னை மாநகர மக்கள் குறிப்பாக வடசென்னை மக்கள் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் உறைந்துள்ளனர்.
திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படுகொலையில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கண்டறிந்து கடும் தண்டனை வழங்க வேண்டும். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது தான் ஒரு மாநில அரசின் முதல் கடமை அந்த கடமையிலிருந்து திமுக தவறியிருக்கிறது. காவல்துறையை தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.