கணவனுக்கு மனைவியாகவும், தாயாகவும், கொளுந்தியாளாகவும் மாறும் நிலை ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால், முத்தலாக் முறையைப் போலவே ஹலாலா முறையையும் தடை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.
ஷபீனா என்கிற இஸ்லாமிய பெண் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எனக்கு 2009-ல் திருமணம் நடந்தது. 2 வருடங்களாக குழந்தை இல்லாததால் எனது கணவர் என்னை தலாக் (விவாகரத்து) செய்து விட்டார். ஆனால், இந்த விஷயம் நமது குடும்பத்துக்குள்ளேயே இருக்கட்டும் என்று கணவர் வீட்டார் கூறினார்கள். பின்னர், எனது மாமனாருடன் எனக்கு ஹலாலா (திருமணம்) நடந்தது. இதன் பிறகு, எனது கணவர் என்னை மீண்டும் திருமணம் செய்து கொண்டார். அப்படியும் குழந்தைகள் இல்லாததால், 2017-ல் எனது கணவர் என்னை மீண்டும் தலாக் செய்து விட்டார்.
இதையடுத்து, எனது பெற்றோர் எனது கணவர் வீட்டாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதற்கு, எனது கணவரின் வீட்டார், எனது கணவரின் சகோதரருடன் ஹலாலாவை நிறைவேற்றும்படி கூறினார்கள். இதற்கு, நானும், எனது பெற்றோரும் ஒப்புக் கொள்ளவில்லை. நான் எல்லோரிடமும் உறவு வைத்துக்கொள்ள முடியுமா? எனது கணவருடன் மட்டும்தான் உறவு வைத்துக்கொள்ள முடியும். ஆனால், எனது கணவருடனும் உறவு வைத்துக் கொள்ள வேண்டுமாம். அவரது தந்தையுடனும் உறவு வைத்துக் கொள்ள வேண்டுமாம். அவரது சகோதரருடனும் உறவு வைத்துக் கொள்ள வேண்டுமாம். நான் என்ன பெண்ணா, விளையாட்டுப் பொருளா?
ஆகவே, எனது பெற்றோர் மறுத்து விட்டார். இதையடுத்து, அவளால் குழந்தை பெற்றுத் தர முடியாதபோது, அவளை வீட்டில் வைத்துக் கொண்டு வெட்டியாக சாப்பாடு போட முடியாது என்று சொல்லி, எனது பெற்றோரிடம் என்னை அழைத்துச் செல்லும்படி கூறிவிட்டார்கள். நாங்கள் பெண்கள், விளையாட்டுப் பொருள் அல்ல. எங்களுக்கென்று சுயமரியாதை இருக்கிறது. எங்களுக்கும் இதயம் இருக்கிறது. எங்களுக்கும் வலி இருக்கும்” என்று மிகவும் வேதனையுடன் கூறியிருக்கிறார். மேலும், முத்தலாக் தடைச் சட்டம் கொண்டு வந்ததுபோல, இந்த ஹலாலா முறைக்கும் தடைச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.
இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது? எந்த மாநிலத்தில் எடுக்கப்பட்டது? என்பன போன்ற விவரங்கள் தெரியவில்லை. ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.