ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பின் முக்கியத் தலைவராக இருந்தவர் சையது அலி ஷா கிலானி. அனைத்து இந்திய ஹுரியன் மாநாட்டு அமைப்பை தொடங்கியவர்களில் முக்கியத் தலைவர். இவரது மறைவுக்குப் பிறகு அனைத்து இந்திய ஹுரியன் மாநாட்டு அமைப்பின் இடைக்கால தலைவராக இருந்தவர் மசாரத் ஆலம். இவர், தற்போது முஸ்லீம் லீக் ஜம்மு காஷ்மீர் அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், முஸ்லீம் லீக் ஜம்மு காஷ்மீர் அமைப்பு தேச விரோத மற்றும் பிரிவினைவாத செயல்களில் ஈடுபடுவதாகவும், தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமிய ஆட்சியை அமைக்க வேண்டும் என்று பொதுமக்களை தூண்டுவதாகவும் கூறி, இந்த அமைப்புக்குமத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “மசாரத் ஆலமின் முஸ்லீம் லீக் ஜம்மு காஷ்மீர் கட்சியை (MLJK – MA) சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் (உபா) கீழ் சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கிறோம்.
இந்த அமைப்பும், இதன் நிர்வாகிகளும் ஜம்மு காஷ்மீரில் தேச விரோத செயல்களிலும், பிரிவினைவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், தீவிரவாத செயல்களை செய்ததுடன், ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமிய ஆட்சி அமைய வேண்டும் என்று மக்களை தூண்டி விட்டு வருகின்றனர்.
இந்தியாவின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிரான செயல்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் சட்டத்தின் சீற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை பிரதமர் மோடியின் அரசு, தெளிவாகவும் உரக்கவும் குறிப்பிட விரும்புகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதேபோல், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 9 அமைப்புகளுக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி 5 ஆண்டுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.