தமிழகத்தில் கிருஸ்துவ மதத்தை சேர்ந்த மக்களின் மக்கள் தொகை தேசிய சராசரியை விட அதிகரித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து திராவிட மாடல் தி மு க அரசு, இந்த அதிகரிப்பு பிறப்பு விகிதத்தாலா அல்லது மதமாற்றத்தாலா என்பதை கவனித்து உரிய நடவடிக்கை எடுக்குமா ? என்று பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
அஸ்ஸாமில் இஸ்லாமிய மக்களின் மக்கள் தொகை ஒவ்வொரு வருடமும் 30 விழுக்காடு அதிகரித்து வருவதாகவும், ஹிந்துக்களுடைய மக்கள் தொகை 16 விழுக்காடு மட்டுமே அதிகரித்து வருகிறது எனவும் அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ள நிலையில், தற்போது அஸ்ஸாமில் 40 விழுக்காடு முஸ்லிம்கள் உள்ளனர் என்றும் 2041ம் ஆண்டுக்குள் அம்மாநிலத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மை சமுதாயத்தினராகி விடுவார்கள் என்றும், மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க தன் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் கூறியுள்ளார். அதே நிலை தான் மேற்கு வங்காளத்திலும் உள்ளது. இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில், குறிப்பாக வங்காளதேச எல்லை மாநிலங்களில் இஸ்லாமிய மக்களின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. உத்தர பிரதேச மாநிலத்திலும் அதே நிலை தான்.
சமீபத்திய ஆய்வு ஒன்றின் அடிப்படையில், சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் ஹிந்து மக்களின் மக்கள் தொகை 7.82 விழுக்காடு குறைந்துள்ளது (85%-78.06%) என்றும், அதே காலகட்டத்தில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 43.15 விழுக்காடு. (9.84 -14.0%) அதிகரித்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பலவற்றில் பெரும்பான்மையினரின் மக்கள் தொகை குறைந்து வருகிற அதே காலகட்டத்தில் தெற்கு ஆசிய நாடுகளான வங்காளதேசம், பாகிஸ்தான், பூடான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் மட்டும் பெரும்பான்மை (இஸ்லாமியர்கள்) சமுதாயத்தினரின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இந்த நாடுகளில் இருந்த சிறுபான்மையினரின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தென் இந்திய மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்துகிறார்கள், ஆனால், வட இந்திய மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்த மறுப்பதால் தான், நிதி ஆணையம் நிதிப் பங்கீட்டை திட்டமிடும் போது தமிழகத்திற்கு நிதி குறைந்து விடுகிறது என்று தி மு க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வாதம் புரிவதோடு, அம்மாநில அரசுகளை குற்றம் சாட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், இந்த மக்கள் தொகை பெருக்கம் அல்லது கட்டுப்பாடு என்பது ‘மாநிலம் சார்ந்தது அல்ல’, ‘மதம் சார்ந்தது’ என்ற உண்மையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், சிறுபான்மை மக்களின் காவலர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் தி மு க மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்த அவசியத்தை எடுத்துரைப்பார்களா? நாட்டுக்கும், அச்சமுதாயத்துக்கும் மக்கள் தொகை கட்டுப்பாடு எந்த அளவிற்கு பயன் தரும் என்பதை விளக்கி சொல்ல வேண்டும். மேலும், தமிழகத்தில் கிருஸ்துவ மதத்தை சேர்ந்த மக்களின் மக்கள் தொகை தேசிய சராசரியை விட அதிகரித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து திராவிட மாடல் தி மு க அரசு, இந்த அதிகரிப்பு பிறப்பு விகிதத்தாலா அல்லது மதமாற்றத்தாலா என்பதை கவனித்து உரிய நடவடிக்கை எடுக்குமா ? இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.