தேர்தல் நடத்தை விதியின் பெயரால் மக்களின் அடிப்படை உரிமையை தடுப்பது அரசியலமைப்புக்கு விரோதமானது இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது –
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன. அதே சமயம் இந்த தேர்தல் காலத்தில் மிக முக்கியமான ஆன்மீக திருவிழாக்கள் வருகின்றன.
இந்நிலையில் கோவில் திருவிழாக்களுக்கும் தனிப்பட்ட குடும்ப விழாக்களுக்கும் முன் அனுமதி பெற வேண்டும் என வலியுறுத்துவது அரசியல் சாசன சட்டம் தரும் மக்களின் அடிப்படை உரிமைக்கு இடையூறு செய்கின்ற செயல் என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.
மேலும் தேர்தல் நடத்தை விதி குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பேட்டியின் போது நிருபர்கள், முஸ்லிம்கள் ரம்ஜான் நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வதற்கு தடை உண்டா? என்று கேள்வி எழுப்பிய போது, அந்த அதிகாரி கலந்து கொள்ளத் தடையில்லை ஆனால் அங்கு தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று கூறினார்.
ஆக, முஸ்லிம்கள் கொண்டாட்டத்திற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை, அடுத்து கிறித்துவர்கள் அனுசரிக்கும் புனித வெள்ளி (Good Friday), ஈஸ்டர் நிகழ்வுகளில் தேர்தல் கமிஷன் தலையிடுமா? அவர்கள் அனுமதி கேட்டார்களா என்று கேட்பார்களா??
ஆனால் பங்குனி உத்திரம், சித்திரை வருட பிறப்பு, சித்திரை திருவிழாக்கள், மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா எனத் தொடர்ந்து வரும் அனைத்து கோவில் மற்றும் ஆன்மீக விழாக்களை கொண்டாட முட்டுக்கட்டை போடுவது போல தற்போது அனைத்து விழாக்களுக்கும், குடும்ப சுப காரியங்களுக்கும் தேர்தல் அதிகாரி அனுமதி பெறவேண்டும் என்ற நிலை ஏன்? வழிபாட்டு உரிமையில் தலையீடுவது சட்ட விரோதம் இல்லையா?
எனவே இந்திய தேர்தல் ஆணையம் இதனை கவனத்தில் கொண்டு பாரபட்சமாக செயல்பட்டு இந்துக்களின் திருவிழாவிற்கு இடையூறு செய்யும் அதிகாரிகளுக்கு அறிவுரை கூறி இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று இந்து முன்னனி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.