அமெரிக்காவில் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் குடியரசுகட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப்பும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இந்நிலையில், ட்ரம்ப் கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக அமெரிக்க செனட்டர் ஜேம்ஸ் டேவிட் வான்ஸை தேர்ந்தெடுத்துள்ளார்.
வான்ஸின் மனைவி உஷா சிலுகுரி இந்திய வம்சாவளி ஆவார். ஜோ பைடன் அரசின் துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியும் இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டக்கல்லூரியில் வான்ஸும் உஷாவும் யேல் சட்டக் கல்லூரியில் 2013-ம்ஆண்டு முதன்முறையாக சந்தித்தனர். அவர்களிடையே காதல் மலர்ந்த நிலையில், 2014-ம் ஆண்டு இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இவான், விவேக், மிராபெல் என மூன்று குழந்தைகள் உள்ளன.
வழக்கறிஞராக உள்ள தன் மனைவி உஷா குறித்து டேவிட்வான்ஸ் கூறுகையில், “என் வளர்ச்சிக்கு என் மனைவியே முக்கிய காரணம். என் பணியிலும் ஆன்மிகப் பயணத்திலும் என்னை நான் உணர அவர் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளார்” என்றார்.
தன் மத நம்பிக்கை குறித்து உஷா கூறுகையில், “என் பெற்றோர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். இதனால், அவர்களால் சிறந்த பெற்றோராகவும் நல்ல மனிதர்களாவும் இருக்க முடிந்தது. என் சொந்த வாழ்க்கையிலும் அந்த ஆற்றலை உணர்கிறேன். நானும் என் கணவரும் நிறைய உரையாடுவோம். இதன் காரணமாக, நாங்கள் இருவேறு மத நம்பிக்கைகளைக் கொண்டிருந்தாலும், குழந்தைகளை வளர்ப்பதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை” என்றார்.