என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு காவல்நிலைய அந்தஸ்து வழங்கிய தி.மு.க. அரசை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகியான இடும்பவனம் கார்த்தி மிக கடுமையாக சாடியிருக்கிறார்.
மத்திய புலனாய்வு விசாரணை அமைப்புகளில் ஒன்று தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பு. அதாவது, நாட்டில் பயங்கரவாத செயல்கள் அரங்கேறாமல் தடுப்பது, நாட்டுக்கு எதிராக சதிச் செயல்களில் ஈடுபடுபவர்களின் முயற்சிகளை முறியடிப்பது இந்த அமைப்பின் மிக முக்கிய பணியாகும். கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் மும்பையில் அரங்கேற்றப்பட்ட பயங்கரவாதத்துக்குப் பிறகு, இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இதையடுத்து, இந்த அமைப்பு தேசத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் நபர்கள் மற்றும் அமைப்புகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
அந்த வகையில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாடு முழுவதும் அதிரடி சோதனையை மேற்கொண்டது. இதில், கணக்கில் வராத பணம், பயங்கர ஆயுதங்கள் மற்றும் முக்கிய ஆதாரங்கள் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, பி.எஃப்.ஐ. அமைப்புக்கு இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்து இருந்தது.
நாட்டின் இறையாண்மையை காக்கும் பொருட்டும், அமைதியை ஏற்படுத்தும் விதமாக, மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கையை பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் வரவேற்று இருந்தன. ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம் மற்றும் நாம் தமிழர் போன்ற சில்லறை கட்சிகள் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தன. பி.எஃப்.ஐ. தடையை இஸ்லாமிய குருமார்களே வரவேற்று இருக்கும் நிலையில், உதிரி கட்சியில் எதற்கு இடையில் குறுக்க மறுக்க சைக்கிள் ஓட்ட வேண்டும் என பலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகியான இடும்பவனம் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னை, புரசைவாக்கத்தில் என்.ஐ.ஏ.வின் அலுவலகத்துக்கு காவல்நிலைய அந்தஸ்து வழங்கி அறிவிப்பாணை வெளியிட்டிருக்கிறது வெட்கங்கெட்ட திமுக அரசு. இதுதான் மாநிலத் தன்னாட்சியைக் காப்பாற்றும் இலட்சணமா? இதுதான் அண்ணா வழியிலான ஆட்சியா? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.