மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையிலான அமர்வில் நேற்று நடைபெற்றது.
அப்போது சீமான் தரப்பில், பல ஆண்டுகளாக கரும்பு விவசாயி சின்னத்தில் தான் போட்டியிட்டு வருகிறோம். எனவே இந்த முறையும் இந்த சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி மன்மோகன், ‘‘ பொது சின்னம் பட்டியலில் உள்ள அந்த சின்னத்தை முதலில் கோருபவர்களுக்கு முன்னுரிமை அளித்து தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அதன்படி அந்த சின்னம் தற்போது வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது.
குறிப்பிட்ட கட்சிக்காக ஆணையத்தின் நடைமுறையை மாற்ற முடியாது. மேலும் நாம் தமிழர் கட்சி இன்னும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சி. அப்படியிருக்கும்போது எப்படி ஒரு குறிப்பிட்ட சின்னத்தை உரிமை கோர முடியும் என்றார்.
மேலும் தலைமை தேர்தல் ஆணையம் தரப்பிலும் விளக்கமளிக்கப்பட்டது. அப்போது நாம் தமிழர் கட்சி சார்பில், ‘‘ பொது சின்னம் கோருவதற்கான கால அவகாசம் இன்னும் உள்ளது. சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க மறுப்பது ஏற்புடையதல்ல” என வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி மன்மோகன், “அந்த சின்னம் உங்களுக்கு கிடைக்க அதிர்ஷ்டமில்லை போல, எனவே அதை இந்தமுறை மாற்றி விடுங்களேன்” என நகைச்சுவையாக கருத்து தெரிவித்தார். அதன்பிறகு இதுதொடர்பாக உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் எனக்கூறினார்.