நாகையில் சித்த மருத்துவரையும், அவரது தாயையும் தாக்கியதோடு, அவர்களது மெடிக்கல் கடையையும் சூறையாடி, தி.மு.க. நிர்வாகி அராஜகத்தில் ஈடுபட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு கிராமத்தில் அமைந்திருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவராக பணிபுரிந்து வருபவர் ஆறுமுகம். இவர், நாகப்பட்டினம் பெரியகடை வீதியில் சித்த மருத்துவ கிளினிக் நடத்தி வருகிறார். அதன் அருகிலேயே அமிர்தாலயா என்கிற பெயரில் மெடிக்கல் கடையும் வைத்திருக்கிறார். இந்த சூழலில், நாகையில் பழக்கடை வைத்திருக்கும் சண்முகத்திற்கும், மருத்துவர் ஆறுமுகத்திற்கும் இடையே இடம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்திருக்கிறது. இது குறித்து டாக்டர் ஆறுமுகம் போலீஸில் புகார் அளித்திருந்த நிலையில், விசாரணைக்கு வருமாறு இரு தரப்பினரையும் போலீஸார் அழைத்திருந்தனர்.
விசாரணைக்கு வந்த சண்முகம், தனக்கு ஆதரவாக தி.மு.க. வார்டு செயலாளராக இருக்கும் பாபுவையும் அழைத்து வந்திருக்கிறார். பின்னர், போலீஸ் ஸ்டேஷனில் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. ஆனால், இப்பேச்சுவார்த்தைக்கு டாக்டர் ஆறுமுகம் சம்மதிக்கவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த தி.மு.க. செயலாளர் பாபு, சண்முகம், அவரது மகன் மணிமாறன் ஆகியோர் அடியாட்களுடன் டாக்டர் ஆறுமுகத்தின் கிளினிக்குச் சென்றிருக்கிறார்கள். அப்போது, டாக்டர் ஆறுமுகத்தை சரமாரியாகத் தாக்கியவர்கள், தடுக்க வந்த அவரது தாய் சாந்தியையும் தாக்கினார்கள். மேலும், கிளினிக் அருகில் இருந்த டாக்டர் ஆறுமுகத்தின் மெடிக்கல் கடையையும் அடித்து நொறுக்கி சூறையாடினர்.
இத்தாக்குதலில் பலத்த காயமடைந்த டாக்டர் ஆறுமுகத்தின் தாயார் சாந்தி, நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து டாக்டர் ஆறுமுகம் அளித்த புகாரின் பேரிலும், சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையிலும், தி.மு.க. செயலாளர் பாபு, பழக்கடை சண்முகம், அவரது மகன் மணிமாறன் மற்றும் அவர்களது அடியாட்கள் உள்ளிட்டோர் மீது நாகை போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, அக்கட்சியினரின் அராஜகங்களும், அடாவடிகளும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், நாகையிலும் தி.மு.க.வினரின் அராஜகம் அரங்கேறி இருக்கிறது.