குமாரபாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுவரும் தினசரி காய்கறி மார்க்கெட், தரமற்ற முறையில் இருப்பதாக வியாபாரிகளும், பொதுமக்களும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகில் தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இது மிகவும் பழமையான கட்டடத்தில் இயங்கி வந்ததால், இடித்து விட்டு புதிய மார்க்கெட் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2.72 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பழைய கடைகள் இடக்கப்பட்டு, புதிய கட்டடத்திற்கான பணிகள் கடந்தாண்டு மே மாதம் 19-ம் தேதி தொடங்கப்பட்டன. இங்கு 1,800 சதுர மீட்டர் பரப்பளவில் கடைகள், நவீன கழிப்பிடம், ஏ.டி.எம். மையம், பாதுகாவலர் அறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கட்டடம்தான் தரமற்ற முறையில் கட்டப்படுவதாக வியாபாரிகள் குற்றம்சாட்டி இருக்கிறார்கள். அதாவது, கட்டடத்தின் தூண்கள் பலவீனமாக இருப்பதாகவும், கான்கிரீட் பூச்சுகள் காலால் உதைத்தாலே உதிர்ந்து விழும் நிலையில் இருப்தாகவும், கழிப்பறை சுவர்கள் கையோடு பெயர்ந்து வருவதாகவும் பொதுமக்களும் வியாபாரிகளும் குற்றம்சாட்டி இருக்கிறார்கள். இதுகுறித்து மார்க்கெட் வியாபாரி தாமோதரன் கூறுகையில், “தரமற்ற பொருட்களை கொண்டு மார்க்கெட் கட்டப்பட்டிருக்கிறது. தொட்டாலே உதிர்ந்து விழுகிறது. ஆகவே, தரமான கட்டத்தை உறுதி செய்ய வேண்டும். அதேபோல, மார்க்கெட்டுக்குள்ளேயே கழிப்பறையை கட்டி இருக்கிறார்கள். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் இருக்கிறது. ஆகவே, கழிப்பறையை வெளியில் கட்ட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
உதைத்தாலே உதிர்ந்து விழும் மார்க்கெட் கட்டடம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.