Share it if you like it
திமுக.,வினர் பயன்படுத்தும் ஒன்றிய அரசு என்ற வார்த்தை யாரோ சில அறிவிலிகளின் ஆலோசனைபடி செய்யப்படும், சிறு பிள்ளைத்தனமான பிரசாரம் என தமிழக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், நேற்று வெளியிட்ட அறிக்கையில்
ஒன்றிய அரசு என்று மத்திய அரசை அழைக்கலாமா? அது சரியா? தவறா? என்றெல்லாம் விமர்சனங்கள், வாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. Union என்ற ஆங்கில சொல்லுக்கு ஒன்றியம் என்று அகராதி சொல்கிறது. ஆகையால் ‘ஒன்றியம்’ என்ற வார்த்தை தவறல்ல. ஆனால், ஆங்கிலத்தில் ஒரு தனி வார்த்தைக்கும், அது வேறு சில சொற்களை இணைத்து சொல்லப்படும் போது அதன் பொருளுக்கும் உள்ள வேறுபாட்டை பொது அறிவு உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். சொல் குற்றம் இல்லையானாலும் பொருளில் குற்றம் உள்ளதா?
‘India that is Bharat shall be a Union of States’ என்று தெளிவாக குறிப்பிடுகிறது இந்திய அரசியலமைப்பு சட்டம். அதாவது ‘இந்தியா என்கிற பாரதம் பல மாநிலங்கள் ஒன்றடங்கிய நாடாக இருக்கும்’ என்பதே அதன் பொருள்.
இது குறித்த பல்வேறு விமர்சனஙகள் எழுந்த போது,
” சட்டப்பிரிவு 1 ல் Union of States’ என்று கூறப்பட்டிருப்பது குறித்து சிலர் விமர்சிக்கிறார்கள். மாநிலங்களின் கூட்டமைப்பு (Federation of States) என்றே குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும் என்கிறார்கள். ஒற்றையாட்சி உள்ள தென்னாப்பிரிக்கா ஒருங்கிணைந்த தென்னாப்பிரிக்கா என்று அழைக்கப்படுகிறது. கூட்டமைப்பாக உள்ள கனடாவும் ஒன்றியம் என்று ஏன் அழைக்கப்படுகிறது என்று எனக்கு புரியவில்லை. இந்தியாவை இப்படி அழைப்பதில் தவறேதுமில்லை. Union (ஒன்றியம்) என்ற வார்த்தையை அரசியலமைப்பு சட்ட வரைவு குழு குறிப்பிட்டது ஏன் என்பதை நான் சொல்கிறேன். மாநிலங்களோடு செய்து கொண்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில் இந்தியா இணையவில்லை என்ற போதிலும் இந்தியா கூட்டாட்சி முறையிலான நாடாக இருக்க முடிவெடுத்தது என்பதை இந்த அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழு தெளிவுபடுத்துகிறது. மேலும், எந்த ஒப்பந்தங்களும் இல்லாத நிலையில், எந்த மாநிலத்திற்கும் இந்தியாவிலிருந்து பிரிவதற்கு உரிமை இல்லை.கூட்டாட்சி முறை என்பது ஏனெனில் இந்த ஒருங்கிணைந்த இந்தியா (Union of India) அழிக்க முடியாதது. நிர்வாக வசதிகளுக்கு இந்த நாடும், நாட்டு மக்களும் பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டாலும் ‘இந்தியா ஒரே நாடு’ தான். ஒரே கோட்பாட்டின் அடிப்படையில் கட்டற்ற வலிமையான அரசை கொண்ட ஒரே மக்களின் நாடு தான் இந்தியா. தங்கள் நாடு அழிந்து போகாமல் இருப்பதற்கு, மாநிலங்களுக்கு பிரிவினை கேட்கும் உரிமை கிடையாது என்பதை நிலைநாட்டுவதற்கு அமெரிக்கா மிகப்பெரிய உள்நாட்டு போரை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால், இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவு குழுவானது எந்த ஒரு ஊகத்துக்கும், பூசல்களுக்கும் இடம் தராது தெளிவுபடுத்த வேண்டும் என எண்ணியதன் அடிப்படையில் இந்த விளக்கம்” என்று அரசியல் நிர்ணய சபையிலேயே தெளிவுபடுத்தினார் அண்ணல்.அம்பேத்கர் அவர்கள்.
அதாவது மாநிலங்களால் இந்தியா உருவாக்கப்படவில்லை என்பதோடு இந்தியாவினால் உருவாக்கப்படுபவைகளே மாநிலங்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது அண்ணல் அம்பேத்கரின் விளக்கம். அமெரிக்கா போன்ற நாடுகள் ஒப்பந்தத்தில் இணைந்தவை. ஆனால் இந்தியா எந்த ஒப்பந்தகளினாலும் உருவாகவில்லை. ‘ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே அரசு’ என்பதின் கோட்பாட்டில் தோன்றிய வல்லரசு என்பதை, ஒன்றிய அரசு என்று உள்நோக்கத்தோடு பேசுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய நாடு நினைத்தால் எவ்வளவு மாநிலங்களை வேண்டுமானாலும் உருவாக்க முடியும் என்பதே இந்திய அரசுக்கு அண்ணல் அம்பேத்கர் கூறியிருக்கும் அதிகார எல்லை. இந்தியா சுதந்திரம் அடைந்து பத்தாவது வருடத்தில் தான், இந்திய அரசு தன் நிர்வாக வசதிக்காக மாநிலங்களை சீரமைத்தது என்பதை கூட அறியாமல் தேவையற்ற, உண்மைக்கு புறம்பான விஷயங்களை பேசிக்கொண்டிருப்பது வீண் வேலை.
பாஜக, சிறிய மாநிலங்களை உருவாக்கி, நிர்வாக சீர்திருத்தங்களை அமல்படுத்தி அதிகார பரவல் மூலம் முன்னேற்றத்தை, மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற விரும்பும் கொள்கையினை கொண்டது. பாஜக ஆட்சியில் தான் ஜார்கண்ட், சட்டிஸ்கர் மற்றும் உத்தரகாந்த் போன்ற புதிய மாநிலங்கள் உருவாகின என்பதையும், அதுவே வளர்ச்சிக்கான பாதை என்பதையும் யாராலும் மறுக்க முடியாது. தி மு கவின் தற்போதைய சட்ட சபை தேர்தல் வெற்றிக்கு பின், திடீரென்று மத்திய அரசு என்ற சொல்லுக்கு பதிலாக ஒன்றிய அரசு என்ற வார்த்தையை அந்த கட்சியினர் பயன்படுத்தி வருவது யாரோ சில அறிவிலிகளின், அவசரக்குடுக்கைகளின் ஆலோசனையின் படி செய்யப்படும் சிறுபிள்ளைத்தனமான பிரச்சாரமே. சொல் குற்றம் ஏதுமில்லை என்றாலும் பொருட்குற்றம் உள்ளது என்பதையும், ஒன்றிய அரசோ, மைய அரசோ, மத்திய அரசோ, இந்தியா என்பது ஒரு குடையின் கீழ் தான் இயங்குகிறது என்பதை அண்ணல் அம்பேத்கரின் விளக்கத்தின் மூலம் அறிந்து கொள்வார்கள் என நம்புகிறேன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Share it if you like it