உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது போஸ்டரை ஒட்ட அரசு பள்ளி மாணவர்கள் நிர்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்தான, செய்தியினை பா.ஜ.க. மூத்த தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பா.ஜ.க.வின் முன்னோடி மற்றும் துணை தலைவராக இருக்கும் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இதோ.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் பல இடங்களில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. அனுமதியின்றி சுவரொட்டிகள் ஓட்டுவதே குற்றம் எனும் நிலையில், அந்த பகுதி தி மு கவினர், அரசு பள்ளி மாணவர்களை சுவரொட்டிகளை ஓட்டுவதற்கு கட்டாயப்படுத்தினர்
என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இளைய சமுதாயத்தை, அடுத்த தலைமுறையை சீரழிக்கும் இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும், அன்றைய தினம் நடந்த கூட்டத்தில் மாணவ, மாணவியரை பொது மேடையில் ஏற வைத்து உதயநிதி குறித்து ‘புகழ்மாலை’ பாட செய்திருப்பது அராஜகத்தை உச்சகட்டம். ஏற்கனேவே
தமிழக அரசு பள்ளி மாணவர்களிடையே போதை, மது, சூதாட்டம் போன்ற பல்வேறு தீய பழக்கங்கள் மலிந்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த தெரியாமல், முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது கல்வித்துறை, தமிழக அரசும். ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்காக உருகுவது போல் நடிக்கும் தி மு க அரசு,அம் மாணவர்களை
கொத்தடிமைகளை போல் நடத்தியிருப்பது கொடூரமான செயல் அதிர்ச்சியளிக்கிறது. தலைவர்கள் உருவாக வேண்டுமே தவிர, உருவாக்க முயற்சிக்கக்கூடாது. தலைவர்களை மக்கள் மத்தியில் திணிக்க முற்படுவது கொடுங்கோலர்களின் கொடூர எண்ணமாகத் தான் கருதப்படும்.
நான் அனைவருக்குமான முதல்வர் என கூறும் முதலமைச்சர் அவர்கள் இந்த குற்றத்தை செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவார் என நம்புகிறேன்.