கோயம்புத்தூர் மாவட்டம் பாலக்காடு நெடுஞ்சாலை கரும்புக்கடை சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா மற்றும் உயர் ரக போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் கரும்புக்கடை போலீசார் சுண்ணாம்பு காலவாய் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட போது சந்தேகத்திற்கிடமாக ஐந்து இளைஞர்களை அழைத்து போலீசார் விசாரித்ததில், அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மெத்தபட்டோமின், மருந்து குப்பிகள் ஆகியவற்றை வைத்திருந்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து, அவர்கள் ஐந்து பேரும் கைது செய்யபட்டு, அவர்களிடம் இருந்து 3 கிராம் மெத்தபடோமெயின் மற்றும் 116 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்த போலீசார், பிரவின் செட்டி, சாகுல் அமீது, முருகன், ரியாஸ்கான், அக்பர் அலி ஆகிய ஐந்து பேரையும் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், “கோயம்புத்தூர் மாநகரில் போதை பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்கு தனி படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்பொழுது இந்த வழக்கில் கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்தும் வலி நிவாரணி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை போதைக்காக பயன்படுத்தி வந்துள்ளனர்.
மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் ஒரு சில மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்தி வருகின்றனர். மெடிக்கல் சிரஞ்சுகளை வாங்கி ஊசியாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த மாத்திரைகளை கர்நாடகாவில் ஹூப்ளி என்ற இடத்தில் இருந்து வாங்கி உள்ளனர். அங்கு பிரவீன் செட்டி என்பவர் மருந்து கடை வைத்து நடத்தி வரும் நிலையில், கோயம்புத்தூரில் இந்த மாத்திரைகளை விற்பனை செய்துள்ளனர்.
இதற்கு இந்து முன்னணி எக்ஸ் பதிவில், கைது செய்யப்பட்டவர்கள் நெட்வொர்க்காக செயல்பட்டு கோவையில் உள்ள இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து அவர்களுக்கு போதை ஊசி மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். தமிழக அரசு போதை கடத்தலை தடுக்க கூட்டங்கள் போட்டும் இந்த போதை பொருள் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போதைப் பொருள் கடத்தலை தடுக்க நிபுணத்துவம் மற்றும் நேர்மையான அதிகாரிகளை குழுவாக நியமித்து போதைப் பொருள் கடத்தலின் வேர் வரை சென்று மொத்த நெட்வொர்க்கையும் கைது செய்து கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.